கோலாலம்பூர், அக் 24 – கேமரன் மலையில் உள்ள சுல்தான் அபு பக்கார் அணையை அவசரகால நடவடிக்கையாகத் திறந்து விடுவதற்கு முன் நீரில் அளவை ஏன் தொடர்ந்து கண்காணித்து வரவில்லை என்று தேசிய எரிசக்தி வாரியம் விளக்கமளிக்க வேண்டும் என்று ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் ராவுப் முகமட் ஆரீஃப் சாப்ரி அப்துல் அஸீஸ் தெரிவித்துள்ளார்.
“தேசிய எரிசக்தி வாரியம் எல்லாம் முறைப்படி தான் செய்தோம் என்று கூறுகிறது. ஆனால் நீரின் அளவை தொடர்ந்து கண்காணித்து அப்பகுதியில் வாழும் மக்களுக்கு ஏன் எச்சரிக்கை விடுக்கவில்லை?” என்றும் முகமட் ஆரீப் கேள்வி எழுப்பியுள்ளார்.
“மக்களுக்கு எந்தவொரு எச்சரிக்கையும் அறிவிக்காமல் அணையத் திறந்துவிட்டதால் தான் இவ்வளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளன” என்றும் முகமட் ஆரீப் குறிப்பிட்டார்.
இவ்விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் அவசரகால கூட்டம் ஒன்றை நடத்தி தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று முகமட் ஆரீப் சபாநாயகரிடம் விண்ணப்பம் ஒன்றையும் சமர்ப்பித்துள்ளார்.
தொடர் கனமழையின் காரணமாக சுல்தான் அபு பக்கார் அணை நிரம்பி வழிந்தது. இதனால் அணை உடைவதைத் தடுப்பதற்காக நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் நீர் வெளியேற்றப்பட்டது. இந்த சம்பவத்தில் 100 வாகனங்கள் மற்றும் 80 வீடுகளுக்கும் மேல் நீரில் அடித்துச்செல்லப்பட்டன. இச்சம்பவத்தில் 3 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.