கோலாலம்பூர், அக் 24 – தேசிய அளவில் சவாலாக விளங்கும் பிரச்சனைகளை அடையாளம் காண, மலேசியா ஐக்கிய நாடுகளுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றும் என்று துணைப் பிரதமர் முகைதீன் யாசின் இன்று தெரிவித்தார்.
பொற்கால வளர்ச்சித் திட்டங்கள் (Millennium Development Goals) போன்றவற்றில் அரசாங்கம் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருவதாகவும், அதிலுள்ள சவால்கள் பற்றியும், செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் அரசாங்கம் நன்கு அறியும் என்றும் முகைதீன் குறிப்பிட்டார்.
“தாய்மை, குழந்தை இறப்பு, ஹெச்ஐவி, எய்ட்ஸ், ஏழ்மை, வருமானமின்மை மற்றும் பாலினம் சமநிலையடைவது குறிப்பாக தொழில் மற்றும் பொதுநல வாழ்வில் பெண்கள் சுயமாக தங்கள் நிலைகளைத் தேர்ந்தெடுத்து பிரதிநிதிப்பது போன்றவை மிகவும் சவாலானவை” என்று முகைதீன் யாசின் கூறினார்.
இன்று நடந்த ஐக்கிய நாடுகளின் 68 வது ஆண்டுநிறைவு மற்றும் ஐக்கிய நாடுகள் தின விழாவில் கலந்து கொண்ட முகைதீன் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், “இது வரை 20,000 மலேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் முயற்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். உலக அமைதிக்காக இந்த பங்களிப்பு தொடந்து நடைபெறும்” என்றும் முகைதீர் கூறினார்.
அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் மற்றும் பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் வாகித் ஓமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.