கோலாலம்பூர், அக் 25 – ம.இ.கா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாருக்கும் தனது ஆசியோ, ஆதரவோ இல்லை என்றும், கட்சியில் ஜனநாயகம் தான் மிக முக்கியம் என்றும் ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தெரிவித்தார்.
நேற்று மாலை ம.இ.கா தலைமையகத்தில் நடந்த மத்திய செயலவைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பழனிவேல், “ம.இ.கா தேர்தலில் போட்டியிடுவது அவரவர் சொந்த விருப்பம். அதில் நான் தலையிடமுடியாது. யாருக்கும் நான் வாய்ப்பளிக்க முடியாது. யார் வேண்டுமானாலும் எந்த பதவிக்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம்” என்று தெரிவித்தார்.
மேலும், ம.இ.கா மகளிர் அணியில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆசி வழங்கியதாக கூறப்படுவது குறித்து பழனிவேலிடம் கேட்ட போது, “நான் யாருக்கும் ஆசியோ, ஆதரவோ வழங்கவில்லை. தலைவி பதவிக்குப் போட்டியிடும் டாக்டர் பிரேமகுமாரியும், மோகனாவும் எனது அணி வேட்பாளர்கள் என்று அறிவித்துக்கொள்கின்றனர். ஆனால் தலைவர் அணி என்று ஒன்று இல்லவே இல்லை” என்று பழனிவேல் திட்டவட்டமாக அறிவித்தார்.
அத்துடன் மத்திய செயலவைக்கு டத்தின் கோமளா கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுவதாக அறிவித்துள்ளது குறித்து கருத்துக் கூறிய பழனிவேல், “ஜனநாயக முறைப்படி அவர் போட்டியிடுவதில் எந்தத் தவறும் இல்லை” என்று தெரிவித்தார்.
– பீனிக்ஸ்தாசன்