Home கலை உலகம் முதல் நாள் திரைவிமர்சனம்: அஜித்தின் ‘வாலி’ப அட்டகாசம் – ஆரம்பம் (டொக்…டொக்…)

முதல் நாள் திரைவிமர்சனம்: அஜித்தின் ‘வாலி’ப அட்டகாசம் – ஆரம்பம் (டொக்…டொக்…)

1135
0
SHARE
Ad

25-ajiththalaஅக்டோபர் 31 – எதிரிகளிடமிருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாக்க வேண்டியது இராணுவம் மற்றும் காவல்துறையின் கடமை. ஆனால் அந்தத் துறையிலேயே ஊழல் நடந்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை சொல்லும் படம் ‘ஆரம்பம்’.

அஜித்துக்குள் இருந்த ஸ்டைலிஷான கதாப்பாத்திரத்தை ‘பில்லா’ படத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்த விஷ்ணுவர்த்தன், மீண்டும் அஜித்துடன் ‘ஆரம்பம்’ படத்தின் மூலம் கைகோர்த்து இந்த தீபாவளிக்கு பட்டாசு கொளுத்தியிருக்கிறார்.

இந்த கூட்டணியுடன் ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி ஆகியோரும் சேர்ந்து கொண்டால் எப்படி இருக்கும்? நிச்சயம் தீபாவளி களைகட்டும்…

#TamilSchoolmychoice

டை அடிக்காமல், முகப்பூச்சுகள் இல்லாமல் தனது வெள்ளை முடியுடனேயே படம் முழுவதும் வலம் வரும் அஜித்தின் தைரியத்தை முதலில் பாராட்ட வேண்டும். ஆனால் அஜித் என்ன தான் தீவிரவாதியாகக் காட்டப்பட்டாலும், அவர் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் தியேட்டரில் ரசிகர்களின் விசில் சத்தம் காதைப் பிளக்கிறது.

அஜித் நின்றால் கைதட்டல், நடந்தால் கைதட்டல், குண்டு வைத்தாலும் கைதட்டல், குழந்தையை காட்டி மிரட்டினாலும் கைதட்டல் அப்பப்பா …. படத்தில் அஜித் எப்படியும் நல்லவர் தான் என்று ரசிகர்களுக்கு முன்பே தெரியும் போல…

அஜித்துக்கு துணையாக அவருடன் துப்பாக்கியை வைத்துக் கொண்டு வரும் நயன்தாரா, கதாப்பாத்திரத்துக்கு நன்கு பொருந்தியிருக்கிறார்.ஒரு காட்சியில், வில்லனை மயக்க நயன்தாரா செய்யும் கவர்ச்சி சதி பழைய காலத்து தந்திரம் என்றாலும், எடுக்கப்பட்ட விதம் ஆங்கிலப்படங்களில் வருவது போல் அமைந்துள்ளது.-Nayanthara-in-Bikini-in-Arambam5678

சாப்ட்வேர் என்ஜினியராக வரும் ஆர்யா மற்றும் செய்தியாளராக வரும் டாப்ஸி இருவரின் அப்பாவித்தனம் படத்திற்கு கலகலப்பு சேர்த்திருக்கிறது.

ஆர்யாவும், டாப்ஸியும் ஒருவரையொருவர் ‘பேபி’ ‘பேபி’ என்று கூப்பிட்டுக் கொள்(ல்)வது படம் பார்ப்பவர்களுக்கு லேசாக அலுப்பு தட்டுகிறது.

காவல்துறை அதிகாரியாக வரும்  ‘பொல்லாதவன்’, ‘ஹரிதாஸ்’ புகழ் கிஷோர் வழக்கம் போல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

படத்தில் சந்தானம் இல்லாத குறையை உள்துறை அமைச்சராக வரும் மகேஷ் மஞ்ச்ரேகர் என்ற நடிகர்  நிவர்த்தி செய்திருக்கிறார். இத்தனைக்கும் அவர் படத்தில் முக்கிய வில்லனாமாம்…

இப்படி ஒரு  ‘காமெடி பீஸ்’ தான் படத்தின் வில்லனா என்று வீட்டுக்கு போய் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்… அதுவும் குறிப்பாக படத்தின் இறுதிக்காட்சியில் வரும் அவரின் வசனங்கள் சிரிப்பை வரவழைப்பது நிச்சயம்.

அஜித்தின் ஸ்டைலிஷ் மற்றும் நெகட்டிவ் கதாப்பாத்திரத்திற்கு இந்த ‘ஆரம்பம்’ ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு விஷயம் மட்டும் மனதை உறுத்துகிறது .. அஜித் ஜிம்மையே கதியாகக் கிடக்கிறார்…. ஒருநாளைக்கு 4 மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறார் என்று விஷ்ணுவர்த்தன் கடந்த ஒரு வருடமாக எல்லா பத்திரிக்கைகளுக்கும் பலமான பில்டப்களைக் கொடுத்தாரே. ஆனால் படத்துல அப்படி ஒன்னும் தெரியலையே …. தொப்பை தான் ஆங்காங்கே முட்டிக்கொண்டு தெரிகிறது… (ஒரு வேளை அந்த ஒரே ஒரு காட்சிக்காக மட்டுமோ?)

UWAmRMyகதைச் சுருக்கம்

உள்துறை அமைச்சகத்திலேயே ஊழல்… காவல்துறையினருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு கவசம் (Bullet proof jacket) வாங்கியதில் உள்துறை அமைச்சரும், காவல்துறை ஆணையரும் பல கோடி ரூபாய் மோசடி செய்கிறார்கள்.

அந்த காவல்துறையின் சிறப்புப் படையில் அதிகாரிகளாக அஜித் மற்றும் அவரது மச்சான் ராணா வேலை செய்கிறார்கள்.

தீவிரவாதிகளுடன் நடந்த ஒரு சண்டையில் ராணா துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளாகி இறந்து போகிறார். அவரது இறப்பிற்குக் காரணம் உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்ட தரமில்லாத பாதுகாப்புக் கவசம் தான் என்பதை அஜித் கண்டுபிடிக்கிறார்.

இதனால் அஜித் மீது கடும் கோபத்திற்கு ஆளான உள்துறை அமைச்சரும், காவல்துறை ஆணையரும் அவரையும், அவரது குடும்பத்தினரையும் (இதில் நயன்தாராவும் உள்ளார்) அழிக்கிறார்கள்.

இதில் அஜித் மற்றும் நயன்தாரா மட்டும் அதிர்ஷ்டவசமாகப் பிழைத்துக்கொள்கிறார்கள்…

எல்லாம் முடிந்துவிட்டது என்று வில்லன்கள் நிம்மதியாக இருக்கையில், அஜித்தின் பழிவாங்கும் படலம் தொடங்குகிறது அது தான் ‘ஆரம்பம்’.

படத்தின் பலம்Arrambam-Movie-Stills-01

மிகைப்படுத்தப்படாத கதை மற்றும் காட்சிகள்…

படத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை விறு,விறு திரைக்கதை…

அஜித் மற்றும் நயன்தாராவின் நடிப்பு …

ஆர்யா மற்றும் டாப்ஸியின் அப்பாவி குறும்புத்தனங்கள்…..

யுவனின் பிண்ணனி இசை…

ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு….

படத்தின் பலவீனம்

அஜித் மூன்று பெரிய வணிக வளாகங்களுக்கு குண்டு வைத்துவிட்டு, அதை காவல்துறைக்கும் அறிவிக்கிறார். ஆனால்  காவல்துறையால் அதை அகற்ற முடியாமல் அவை வெடித்து சிதறி கட்டிடங்கள் தரைமட்டமாகின்றன. இதில் அப்பாவிப் பொதுமக்களுக்கு எந்த சேதமும் ஏற்படாதா? (இங்கு தான் லாஜிக் இடிக்கிறது)

பாதுகாப்பு கவசம் வாங்குவதில் 200 கோடி ஊழல் நடந்துள்ளது என்றால் அது எவ்வளவு பெரிய வியாபாரமாக இருக்கும்? அதில் எத்தனை பாதுகாப்புக் கவசங்கள் வாங்கியிருப்பார்கள்?

ஆனால் ஆதாரம் இருக்கக்கூடாது என்பதற்காக அந்த தரமில்லாத பாதுகாப்பு கவசங்களை வில்லன்கள் ஒட்டுமொத்தமாக தீயிட்டுக் கொளுத்தும் ஒரு காட்சியில் மொத்தமே 50 பெட்டியைத் தாண்டியிருக்காது.

ஆர்யா ஒரு அதிபுத்திசாலியான சாப்ட்வேர் எஞ்சினியர் சரி…. ஆனால் காவல்துறை அதிகாரியான அஜித்திற்கு எப்படி ஆர்யா அளவிற்கு சாப்ட்வேர் பற்றிய அறிவு இருக்கிறது? (ஹீரோன்னா அப்படித்தான் …அப்படித்தான்…. என்று அஜித் ரசிகர்கள் சொல்வது காதில் விழுகிறது)

இது போன்ற லாஜிக்குகளை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு, தியேட்டரில் போய் உட்கார்ந்தால், இரண்டரை மணி நேரங்கள் விறு விறுப்பான ஒரு திரைப்படத்தைப் பார்த்த மனத் திருப்தியை அடைவீர்கள் என்பது உறுதி…

ஆரம்பம் – அஜித்தின் வாலிப அட்டகாசம் …(டொக்….டொக்)

– பீனிக்ஸ்தாசன்

‘ஆரம்பம்’ படத்தின் முன்னோட்டத்தை கீழ்காணும் இணைய வழித் தொடர்பு மூலம் காணலாம்

http://youtu.be/pQf6qFOr38w