ரமலா, நவம்பர் 9- பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத், விஷம் வைத்து கொல்லப்பட்டதாக கூறப்படும் விஷயத்தில், தங்களுக்கு தொடர்பில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பாலஸ்தீன விடுதலைக்காக 40 ஆண்டு காலம் போராடியவர் யாசர் அராபத்.
இஸ்ரேலிய படைகள் பாலஸ்தீனத்தை முற்றுகையிட்டிருந்த நிலையில் 75 வயதான அராபத் நோய் வாய்ப்பட்டதால் அவர் பிரான்ஸ் நாட்டு விமானம் மூலம் பாரீசுக்கு அழைத்து செல்லப்பட்டார். 2004ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி பாரீஸ் மருத்துவமனையில் இறந்தார்.
கோமா நிலையில் அராபத் இறந்ததால் பிரேத பரிசோதனை ஏதும் செய்யப்படாமல், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அராபத் கடைசியாக அணிந்திருந்த ஆடைகளில் பொலேனியம் விஷத்தின் தடயங்கள் இருந்ததாக சுவிட்சர்லாந்து நாட்டின் லூசானே பல்கலைக் கழக கதிர்வீச்சு துறை நிபுணர்கள் தங்கள் ஆய்வு அறிக்கையில் தெரிவித்து இருந்தனர்.
இதன் மூலம் அவர் பொலேனியம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என அவர்கள் சந்தேகம் எழுப்பி இருந்தனர். இதற்கிடையே, பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில், பேட்டி அளித்த அராபத்தின் மனைவி சுகா குறிப்பிடுகையில், என் கணவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கிறார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், எந்த நாடு அவரை கொன்றது என்பதை தெரிவிக்க விரும்பவில்லை, என்றார்.
அராபத் மரணம் குறித்து சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் என பாலஸ்தீன விடுதலை அமைப்பு கோரியுள்ளது. பாலஸ்தீன விசாரணை அதிகாரி தவுபிக் திராவி குறிப்பிடுகையில், அராபத் மரணத்தில் எங்களுக்கு முழு சந்தேகம் இஸ்ரேல் நாட்டின் மீது தான் என்றார். ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள இஸ்ரேல், அராபத் மரணத்தில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளது.