கோலாலம்பூர், நவ 14 – வரும் நவம்பர் 30 ஆம் தேதி நடைபெறவுள்ள ம.இ.கா தேர்தலில் தேசிய உதவித் தலைவர் பதவிக்குத் தான் போட்டியிடவில்லை என்றும், மத்திய செயலவைக்கு மட்டுமே தான் போட்டியிடுவதாகவும் கல்வித்துறை துணையமைச்சர் பி.கமலநாதன் அறிவித்துள்ளார்.
உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுமாறு தனது ஆதரவாளர்களும், தலைவர்கள் சிலரும் கேட்டுக்கொண்டாலும், அவற்றை சிந்தித்துப் பார்த்து இறுதியாக மத்திய செயலவைக்குப் போட்டியிடுவது என தாம் முடிவெடுத்திருப்பதாகவும் கமலநாதன் தெரிவித்தார்.
அரசாங்கம் வகுத்திருக்கும் 2025 ஆம் ஆண்டு வரைக்குமான கல்விப் பெருந்திட்டத்தில் தனது முழு ஈடுபாட்டை செலுத்தி அதற்காக முனைப்போடு செயல்படப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உதவித்தலைவர் பதவிக்கு தான் போட்டியிடப் போவதாக கூறப்படும் வதந்திகளுக்கு இன்றோடு முற்றுப்புள்ளி வைத்து மத்திய செயலவைக்கு மட்டும் தான் போட்டியிடுவதை அறிவிப்பதாகவும் கமலநாதன் நேற்று தலைநகர் டைனாஸ்டி தங்கும் விடுதியில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.