சென்னை, நவ 19– பெண்களுக்கு தனிவங்கி தொடங்கப்படும் என்று இந்த மத்திய பட்ஜெட்டில் பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்திருந்தார். பெண்கள் மேம்பாட்டிற்காக இவ்வங்கியை மத்திய அரசு கொண்டு வருகிறது.
இந்தியாவில் 6 நகரங்களில் முதன் முதலாக பெண்கள் வங்கி இன்று தொடங்கப்பட்டது. பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காக இந்த முதல் வங்கி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளான இன்று தொடக்கப்பட்டது.
மும்பையில் நடந்த விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் சென்னை, கொல்கத்தா, கவுகாத்தி, அகமதாபாத், பெங்களூரு, மும்பை ஆகிய 6 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள பெண்கள் வங்கியை தொடங்கி வைத்தார்.
சென்னையில் அண்ணா சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலகத்தில் தரை தளத்தில் பெண்கள் வங்கி இன்று முதல் செயல்படுகிறது. 1162 சதுர அடியில் செயல்படும் இந்த வங்கியில் பெண்களுக்கு சேமிப்பு கணக்குகள் தொடங்கப்படும்.
சுய உதவிக்குழுக்கள் மூலம் தொழில் செய்ய கடன் உதவி வழங்கப்படுகிறது. பெண்கள் முன்னேற்றத்திற்கான ஆலோசனைகளும் வழங்கப்படும். டெல்லியை தலைமை அலுவலகமாக கொண்டு பெண்கள் வங்கி செயல்படுகிறது.
பெண்கள் வங்கியின் சென்னை கிளை மேலாளர் கூறும்போது, இந்த வங்கி மற்ற வணிக வங்கிகள் போல செயல்படும். அதனுடன் அனைத்து பண நடவடிக்கைகளும் இருக்கும்.
ஆனால், பெண்களுக்கு மட்டும் இவ்வங்கி முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சேவை வழங்கப்படும்.
இந்த கிளை எட்டு அதிகாரிகளுடன் செயல்படும் தலைமை அதிகாரி மட்டும் மற்ற பொதுத்துறை வங்கிகளில் இருந்து நியமிக்கப்படுகிறார். மற்ற அலுவலர்கள் நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள். வங்கி ஊழியர்களில் ஆண்களும் இடம் பெறுவார்கள். பெண்கள் வங்கியில் ஆண்களும் கணக்கு தொடங்கலாம்.
இந்த வங்கி வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், சிறுபான்மை மற்றும் மாற்றுத்திறன் படைத்தவர்கள் உள்ளிட்ட ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் முன்னேற்றத்திற்காக செயல்படும் என்றார்.