Home அரசியல் சந்தேகிக்கப்படும் 40,000 வாக்காளர்களும் வங்காள தேசிகள் கிடையாது – அன்வார்

சந்தேகிக்கப்படும் 40,000 வாக்காளர்களும் வங்காள தேசிகள் கிடையாது – அன்வார்

587
0
SHARE
Ad

010868677கோலாலம்பூர், நவ 20 – பொதுத்தேர்தலில் 40,000 வங்காள தேசத்தவர்கள் தேர்தல் ஆணையம் மூலம் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டார்கள் என்று பக்காத்தான் எப்போதும் சொல்லவில்லை. ஆனால் பிரதமர் நஜிப் அதையே கூறி நாடாளுமன்றத்தை குழப்ப முயற்சி செய்கிறார் என்று அன்வார் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், “ 40,000 வங்காள தேசிகள் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டார்கள் என்று பக்காத்தான் கூறவில்லை. நாங்கள் கூறியது என்ன? சபா, சரவாக் மாநிலத்தில் இருந்து விமானங்கள் மூலம் சந்தேகப்படக் கூடிய வாக்காளர்கள் கொண்டுவரப்பட்டார்கள் என்று தான் கூறினோம்.” என்று அன்வார் தெரிவித்தார்.

மேலும், “பொதுத்தேர்தலுக்கு முன்பாக 16 சிறப்பு விமானங்கள் தீபகற்ப மலேசியாவில் இருந்து கிழக்கு மலேசியாவிற்கு தினமும் பறந்து கொண்டிருந்தன. அதற்கான புகைப்பட ஆதாரங்கள் கட்சியிடம் உள்ளது. அதை வைத்து கடந்த மே 2 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், 40,500 பேர் இந்த விமானங்கள் மூலம் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்றும், அவர்கள் வெளிநாட்டவர்களாக இருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தோம்” என்று அன்வார் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“என்னுடைய கேள்வி என்னவென்றால் எப்படி இவர்கள் அனைவரும் முன் வாக்காளர்கள் (காவல்துறை, ஆயுதப்படை உட்பட) என்று பட்டியலிடப்பட்டார்கள்?” என்று அன்வார் கேள்வி எழுப்பியுள்ளார்.

“நஜிப் இந்த விவகாரத்தை மூலையில் தூக்கிப் போட்டுவிட்டு, வங்காள தேசப் பிரதமரிடம் 40,000 வாக்காளர்கள் குறித்து கேட்கிறார். அவருக்கு எப்படி தெரியும்? இது ஒரு உள்நாட்டு விவகாரம். இதை தேர்தல் ஆணையம் தான் கவனிக்க வேண்டும்” என்றும் அன்வார் தெரிவித்தார்.

அத்துடன், இந்த 40,000 வங்காள தேசிகள் குற்றச்சாட்டு அம்னோ வலைப்பதிவாளர்கள் பரப்பி விட்ட கட்டுக்கதை என்றும் அன்வார் கூறினார்.