கன்னியாகுமரி, நவம்பர் 25- தமிழ்நாட்டில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை அதிகரித்து உள்ளது என்று குமரியில் நடந்த தேசிய கருத்தரங்கில் உளவியல் ஆலோசகர் கூறினார்.கன்னியாகுமரி அமைதி அறக்கட்டளை சார்பில் நடந்த குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு பணியில் சமுதாயத்தின் பங்கு என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு கன்னியாகுமரியில் உள்ள அமைதி அறக்கட்டளை அரங்கத்தில் நடந்தது.
இதில், கன்னியாகுமரி அமைதி அறக்கட்டளை உளவியல் ஆலோசனை மைய இயக்குனரும், உளவியல் ஆலோசகருமான ரத்னா ராபின்சன் கலந்து கொண்டு பேசியதாவது:நமது நாட்டில் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் தற்போது அதிகரித்து வருகிறது. பாலியல் பலாத்காரம் என்பது ஒரு குழந்தையை சொற்களாலோ, பார்வையாலோ, உடலில் தொட்டோ, பாலியல் செயல்களில் ஈடுபட்டோ கேடு விளைவிப்பதாகும். தமிழகத்தில் 3ல் 1 பெண் குழந்தைகளும், 5ல் ஒரு ஆண் குழந்தையும் இதன் மூலம் பாதிக்கப்படுகின்றனர்.
இதுபோன்ற செயல்கள் வீடுகளிலும், பள்ளிக் கூடங்களிலும் அதிகமாக நடக்கிறது. பெற்றோர்கள் இதில் மிகவும் கவனமாக நடந்து கொள்ளவேண்டும். குழந்தைகளிடம் சாதுர்யமாக பேசி பாலியல் கொடுமைகள் குறித்து விளக்க வேண்டும்.குழந்தைகளுக்கு மிகவும் நெருக்கமான உறவினர்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அதிகமாக உள்ளது. எனவே உளவியல் ரீதியான ஆலோசனைகளைப் பெற்று குழந்தைகளை பாதுகாப்பது பெற்றோர்களின் கையில்தான் உள்ளது. பள்ளிகளில் பாலியல் பலாத்காரம் சம்பந்தமாக குழந்தைகளுக்கு ஆலோசனை கொடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.