கொழும்பு, நவம்பர் 26- இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் இறந்த விடுதலைப் புலிகளின் நினைவாக ஆண்டுதோறும் நவம்பர் 27-ம் தேதி மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான மாவீரர் தினம் நாளை மறுநாள் அனுசரிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், மாவீரர் தினம் அனுசரிக்க இலங்கை அரசு இன்று தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் போர் முடிந்து 4 ஆண்டுகள் ஆகியும், விடுதலைப் புலிகள் அமைப்பு இன்னும் தடை செய்யப்பட்ட அமைப்பாக நீடிக்கிறது. எனவே, புலிகளைக் கொண்டாடும் எந்த நிகழ்ச்சியும் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
“பிரிவினைவாத கருத்துக்களை ஊக்குவித்தல் மற்றும் பரப்பும் பணிகளில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபட்டால் சட்டப்படி அது குற்றம்” என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் நடந்த மாகாண தேர்தலில் தமிழ் கட்சிகள் வெற்றி பெற்றதையடுத்து, இந்த ஆண்டுக்கான மாவீரர் தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டிருந்தது. கடைசி நேரத்தில் தடை விதிக்கப்பட்டதால், தமிழ் கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.