கோலாலம்பூர், நவம்பர் 25 – நாட்டின் தலையாய விமான நிறுவனமான மலேசியா ஏர்லைன்ஸ் 2013 நவம்பர் 28 முதல் 2014 ஜூன் 30 வரை தனது எல்லா விமானச் சேவைகளின் கட்டணங்களையும் குறைக்க திட்டமிட்டுள்ளது. இதனைச் செயல்படுத்தும் வகையில்,அந்நிறுவனம் இன்று தொடங்கி 2013 டிசம்பர் 2 ஆம் தேதி வரை இக்கட்டண குறைப்பு திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
மலேசியா ஏர்லைன்ஸ் குறிபிட்ட விளம்பர தேதி முதல் தனது எல்லா விமானப் பயணத்திற்கும் இக்கட்டணக் குறைப்பை மேற்கொண்டுள்ளது. எக்கோனமி வகுப்பிற்கு 50 விழுகாடு , பிஸ்னஸ் வகுப்பிற்கு 60 விழுக்காடு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக மலேசியா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
மலேசியா ஏர்லைன்ஸ் மேற்கொள்ளும் தனது விமானச் சேவை மையங்களான தென் கிழக்காசியா, வட ஆசியா, தெற்காசியா, மத்திய கிழக்கு, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய இடங்களுக்கு இந்தக் கட்டணக் குறைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இம்மாதிரியான சிறப்பானத் திட்டங்களை மேற்கொண்டு வரும் மலேசியா ஏர்லைன்ஸ், 2014 ஆம் ஆண்டிற்கான மலேசிய வருகை ஆண்டை முன்னிட்டு உள்ளூர் பயணங்களை மேற்கொள்ள நாட்டு மக்களை ஊக்குவிப்பதோடு வெளிநாட்டுப் பயணிகளையும் அழகான இயற்கை வளமைகொண்ட மலேசியாவை சுற்றிப்பார்க்க ஆதரிப்பதாக துணைத் தலைவர் முஸாமி முகமட் தெரிவித்தார்.