மலாக்கா, டிச 1 – வரும் 2015 ஆம் ஆண்டில் ம.இ.கா வின் அனைத்து மாநிலங்களிலும் தலைமைத்துவ தேர்தலை நடத்த கட்சி திட்டமிட்டு வருவதாக அதன் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் இன்று அறிவித்தார்.
மலாக்காவில் இன்று நடைபெற்ற 67 வது ம.இ.கா ஆண்டுக்கூட்டத்தில் உரையாற்றிய பழனிவேல், “கட்சியில் ஜனநாயகம் நிலைத்திருக்கும் வகையில் தொகுதிகளில் திருத்தம் செய்து அதன் பின்னர் மாநில அளவிலான தேர்தல் நடத்தப்படும்.”
“ஜனநாயகம் இல்லை என்றால், கட்சியால் நிலைத்திருக்க முடியாது. எனவே கட்சியின் எதிர்காலத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், 3 உதவித் தலைவர்கள் மற்றும் 23 மத்திய செயலவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் தோல்வியுற்றவர்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக கட்சியின் நலனுக்காக உழைக்க வேண்டும் என்றும், தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது என்றும் பழனிவேல் குறிப்பிட்டார்.
“ம.இ.கா என்பது ஒரே ஒருவருக்கு சொந்தமான கட்சி கிடையாது. எல்லோருக்குமான கட்சி” என்றும் பழனிவேல் கூறினார்.