மலாக்கா, டிச 1 – இந்திய சமூகத்தின் வளர்ச்சியில் தேசிய முன்னணி அரசாங்கம் தொடர்ந்து அக்கறை காட்டும் என்று மலாக்காவில் இன்று நடந்த ம.இ.கா வின் 67 வது ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.
இந்திய சமுதாயத்தின் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து தீர்வு காணப்பட்டு வருவதால் தான், இந்தியர்களிடையே தேசிய முன்னணி அரசாங்கத்தின் மீதுள்ள ஆதரவு கூடுகிறது என்றும் நஜிப் குறிப்பிட்டார்.
உதாரணமாக, கல்வித்துறையில், கடந்த 2010 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் தேசிய மாதிரி தமிழ் பள்ளிகளின் (National-Type Tamil School) தரம் (national average grade – GPN) 2.31 புள்ளிகள் அதிகமாகியுள்ளது என்றும், தேசிய பள்ளிகளுக்கும், தேசிய மாதிரி தமிழ் பள்ளிகளுக்கும் 0.04 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் என்றும் நஜிப் தெரிவித்தார்.
அதோடு, இந்திய சமுதாயத்தின் சாதனைகளில் தான் இன்னும் திருப்தியடையவில்லை என்றும், இன்னும் பல சாதனைகள் புரிய நிறைய வாய்ப்புகள் உள்ளன என்றும் நஜிப் தெரிவித்தார்.
மேலும், 2014 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் மொத்தமுள்ள 264 பில்லியன் ரிங்கிட்டில் 0.08 சதவிகிதம் மட்டுமே இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற கருத்தையும் நஜிப் மறுத்தார்.
இக்கூட்டத்தில், ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், மலாக்கா முதல்வர் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹாரோன், ம.இ.கா துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.சுப்பிரமணியம் மற்றும் முன்னாள் ம.இ.கா தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.சாமிவேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.