டிசம்பர் 8 – நடந்து முடிந்த ம.இ.கா. தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ள 3 தேசிய உதவித் தலைவர்களின் வெற்றியையும் கண்ணோட்டமிடும்போது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் கடும் போராட்டம் நடத்தி, வெற்றி வாகை சூடி, சாதனை படைத்திருக்கின்றார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.
டத்தோ சோதிநாதன்
ஒரே வாக்கு வித்தியாசத்தில் முதலாவது தேசிய உதவித் தலைவராக வெற்றி பெற்றிருப்பவர் டத்தோ எஸ்.சோதிநாதன். அரசாங்கப் பதவி எதுவும் இல்லை. கட்சியிலும் எந்த ஒரு முக்கிய பொறுப்பும் இல்லை.
இரண்டு மாதங்களுக்கு முன்னால் கட்சியின் தேசியத் தலைவரால் மத்திய செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நியமனம் செய்யப்பட்டிருந்தார் சோதிநாதன். அது ஒன்றுதான் அவர் சொல்லிக் கொள்ளும்படியான பதவி. அதுவும்கூட நியமனப் பதவிதான்.
மற்றபடி கடந்த காலங்களில் தேசிய உதவித் தலைவராகவும், தலைமைச் செயலாளராகவும், துணையமைச்சராகவும் ஆற்றிய சேவையை முன்னிருத்தியும், அதனையே தனது அடையாளமாகவும் கடந்த கால பணிகளின் பத்திரமாகவும் கொண்டு களத்தில் குதித்தார் சோதிநாதன்.
அவரது வெற்றிக்கு முக்கியமான மற்றொரு காரணம், தேசியத் தலைவரின் அதிகாரத்துவ அணி வேட்பாளராக அவர் ஆரம்பம் முதலே அடையாளம் காணப்பட்டதுதான்.
தெலுக் கெமாங் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற அனுதாபம் ஒருபுறம் – அவரது சிறந்த கல்வித் தகுதிகள் இன்னொரு புறம் – அவருக்கு இன்னொரு முறை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என பேராளர்களிடத்தில் பரவலாக இருந்த நியாயமான எண்ணம் – இப்படியாக எல்லாம் ஒருமித்து ஒன்று சேர 717 வாக்குகள் பெற்று முதலாவது உதவித் தலைவராக தேர்வு பெற்றிருக்கின்றார் சோதிநாதன்.
நான்காண்டுகளாக அஞ்ஞாத வாசம் புரிந்து, எந்த கட்சிப் பதவியும், அரசாங்கப் பதவியும் இல்லாத பட்சத்தில் – 13வது பொதுத் தேர்தலில் இதே பழனிவேலுவால் வாய்ப்பு மறுக்கப்பட்டு – இன்றைக்கு, அதே பழனிவேலுவின் ஆதரவாளராக களத்தில் குதித்து வெற்றிக் கனியைப் பறித்திருக்கும் வகையில் சோதிநாதன் ஒரு சாதனையாளர்தான்.
டத்தோ எம்.சரவணன்
ம.இ.கா. தேர்தல்கள் தொடங்கிய நாள் முதல் பழனிவேல் குழுவினர் சரவணனைக் கண்டிப்பாக வீழ்த்தி விட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு மறைமுக வேலைகளில் ஈடுபட்டு வந்தனர் என்பது ம.இ.கா. பேராளர்களுக்கு தெளிவாகவே புரிந்திருந்தது.
முதல் கட்டமாக பழனிவேல் சார்பு பேராளர்களிடத்தில் சோதிநாதன், ஜஸ்பால் சிங், விக்னேஸ்வரன் என மூவர் அதிகாரபூர்வ அணியாக அறிவிக்கப்பட்டனர். சிலாங்கூர் பேராளர்களைச் சந்தித்தபோது, பழனிவேல் தனது உரையில் ஜஸ்பாலுக்கும், விக்னேஸ்வரனுக்கும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்று பகிரங்கமாகவே கேட்டுக் கொண்டார்.
அதோடு இந்த அதிகாரத்துவ அணியிலுள்ள மூன்று வேட்பாளர்களில் ஒருவரை பேராளருக்கு பிடிக்கவில்லை என்றால் அதற்கு மாற்றாக அவர் சரவணனுக்கு வாக்களித்து விடலாம் என்ற அச்சத்தில் அந்த வாக்கையும் பாதுகாக்க நான்காவது அதிகாரத்துவ வேட்பாளராக, தேசியத் தலைவரின் ஆசியுடன் டத்தோ பாலகிருஷ்ணன் களமிறக்கப்பட்டார்.
ஆக, தேசியத் தலைவரின் ஆசி இல்லாத, எதிர்ப்பு நிலை ஒருபுறம் – தனக்கு எதிரான பலம் பொருந்திய நான்கு வேட்பாளர்கள் இன்னொரு புறம் என அனைத்தையும் முறியடித்து, தனி மனிதனாக இந்த வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றார் சரவணன்.
நாடு முழுமையிலும், பேராளர்களைச் சந்தித்த ஒவ்வொரு பிரச்சாரக் கூட்டத்திலும் சுமார் ஒரு மணி நேரம் உரையாற்றி தனது எழுச்சி மிகுந்த பேச்சாற்றலால் பேராளர்களைக் கவர்ந்தார் சரவணன்.
சாமிவேலுவின் ஆதரவு சரவணன் பக்கம் என்று கூறப்பட்டாலும், வேட்பு மனுத் தாக்கல் முடிந்த கணத்திலிருந்து சாமிவேலுவின் தலையீடும் எங்கேயும் காணப்படவில்லை. அவரது மகன் வேள்பாரியும் போட்டியிடாத காரணத்தாலும் அவரும் எந்த பிரச்சாரக் கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை.
தனிமனிதப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றார் என்பதோடு, முதல் நிலை உதவித் தலைவர் வாய்ப்பை ஒரே வாக்கு வித்தியாசத்தில்தான் தவற விட்டிருக்கின்றார் என்ற கண்ணோட்டத்தில் இந்த முறை தனிப்பெரும் தலைவராக உருவாகி, சாதனையாளராகத் திகழ்கின்றார் சரவணன்.
டத்தோ பாலகிருஷ்ணன்
கடந்த முறை போட்டியில் இறங்கியபோது, அப்போதைய தேசியத் தலைவர் சாமிவேலுவின் ஆதரவு இல்லாமல் போட்டியிட்டும் நான்காவது இடத்தைப் பிடித்து பேராளர்களைக் கவர்ந்தவர் ஜோகூர் மாநிலத்தின் டத்தோ பாலகிருஷ்ணன்.
இந்த முறை டத்தோ தேசியத் தலைவரின் மறைமுக ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால் பாலகிருஷ்ணனுக்கு இந்த அளவுக்கு தொகுதிகளின் தலைவர்களும் பேராளர்களும் நேரடியாக விருந்துகளில் கலந்து கொண்டு ஆதரவுக் கரம் நீட்டியிருப்பார்களே என்பது சந்தேகமே.
இருந்தாலும், கடந்த நான்காண்டுகளாக எங்கேயும் வெளியே அவ்வளவாக கட்சி நிகழ்வுகளில் தலைகாட்டாமல் இருந்தும், வேட்புமனுத் தாக்கல் முடிந்ததும், புயலெனப் புறப்பட்டு தனியாக பிரபல சீன உணவு விடுதிகளில் பேராளர்களைச் சந்தித்தார் பாலகிருஷ்ணன்.
ஜோகூரின் அனைத்து முக்கிய தலைவர்களையும், தொகுதித் தலைவர்களையும் ஒருங்கிணைத்து பிரச்சாரக் களத்தில் இறங்கிய காரணத்தால் மூன்றாவது பெரிய மாநிலமான ஜோகூரின் பேராளர்களின் பெரும்பான்மையான வாக்குகளை பாலகிருஷ்ணனால் கவர முடிந்தது.
மலாக்கா நகர் முழுவதும் சாலை முனைகளிலும், பேராளர்கள் தங்கியிருந்த தங்கும் விடுதிகளின் சுற்று வட்டாரத்தில் பெரிய அளவில் தனது படத்துடன் கூடிய பிரச்சாரப் பதாகைகளை வைத்து, பொதுத் தேர்தல் போன்ற சூழ்நிலையை ஏற்படுத்தி அசத்தினார் பாலகிருஷ்ணன்.
பிரச்சாரக் கூட்டங்களிலும் சுமார் ஒரு மணி நேரம் பேசினார். அவரது பேச்சுக்கள் இயல்பாக இருந்ததோடு, வந்திருந்த பேராளர்களுடன் வெகு சுலபமாக அவரது பேச்சுக்கள் அவரைப் பிணைத்தன.
“நான் சம்பாதிப்பதற்காக ம.இ.கா.வுக்கு வரவில்லை. தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு எனது தொழில் அனுபவத்தை பங்களிப்பாக வழங்குவேன்” என்பதுதான் எல்லா பிரச்சாரக் கூட்டங்களிலும் அவரது உரையின் முக்கிய அங்கமாக இருந்தது. இதுவும் பேராளர்களைக் கவர்ந்ததாகக் கூறுகின்றார்கள்.
பேராளர்களும் பாலகிருஷ்ணன் குழுவினரால் ‘தாராளமாக’ கவனிக்கப்பட்டனர் – அவரது பண பலமும் அவரது வெற்றிக்கு முக்கிய காரணம் என்பதையும் யாரும் மறுக்க முடியாது. இருப்பினும், இந்த கால கட்டத்தில் அரசியல் போராட்டத்திற்கு பணமும் தேவையான ஓர் ஆயுதம் என்பதை உணர்ந்து, அந்த பண பலத்தோடு களத்தில் இறங்கிய விதத்தில் – அந்த பண பலத்தை தனக்கு சாதகமாக்கிய விதத்தில் பாலகிருஷ்ணனும் சாதனையாளராகவே திகழ்கின்றார்.
(முக்கிய குறிப்பு: மேற்காணும் செய்திக் கட்டுரை செல்லியலுக்காக அதன் ஆசிரியர் குழுவினரால் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டதாகும். இந்த கட்டுரையையோ, அல்லது இதன் பகுதிகளையோ செல்லியலின் முன் அனுமதியின்றி, மற்ற பத்திரிக்கைகளோ, மற்ற இணையத் தளங்களோ பிரசுரிக்கக் கூடாது. மீறி பிரசுரித்தால், மலேசிய சட்டங்கள்படி நடவடிக்கை எடுக்கப்படும்)