கோலாலம்பூர், டிசம்பர் 12 – தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்த் 1950-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே தேதியில் பிறந்தார். கர்நாடக மாநிலத்தில் பிறந்த இவரது இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். இவருடைய பெற்றோர் ராமோசிராவ் கெய்க்வாட்-ராமாபாய் ஆவர். ஐந்து வயதான நிலையில் தனது தாயை இழந்த சிவாஜிராவ் பெங்களூரில் கல்வி பயின்றார். படித்து முடித்தவுடன் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார்.
இந்த காலக்கட்டத்தில் பல மேடை நாடகங்களில் நடித்த சிவாஜிராவ் மனதில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. இதையடுத்து, நடிகராகும் ஆசையுடன் சென்னைக்கு வந்தார். நண்பரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1975-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’ என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். அடுத்து அவர் நடித்த மூன்று முடிச்சு என்ற படம் அவரை சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது.
அதன்பிறகு ‘16 வயதினிலே’, ‘காயத்ரி’ போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். அதன்பிறகு, நிறைய படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். பில்லா, போக்கிரி ராஜா, முரட்டுக்காளை போன்ற படங்கள் இவரை அதிரடி நாயகனாக ஆக்கியது. தில்லு முல்லு திரைப்படத்தின் மூலம் தான் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் என்பதையும் நிரூபித்து காட்டியவர்.
ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் தீவிர பக்தரான இவர் தனது 100-வது படமாக ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் வாழ்க்கை பற்றிய காவிய படமான ‘ஸ்ரீராகவேந்திரா’ படத்தில் நடித்தார். 1980-களில் இவர் நடித்த பல படங்கள் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக இருந்தன. 1999-ஆம் ஆண்டு படையப்பா படத்திற்கு பிறகு சுமார் 3 ஆண்டுகள் படத்தில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.
இதோடு சினிமாவில் இருந்து ஒதுங்கிவிடுவார் என்று நினைத்திருந்த வேளையில், பாபா என்ற படத்தில் நடித்தார். அந்த படம் சரிவர வெற்றியடையவில்லை. இதையடுத்து, ஒரு வெற்றியைக் கொடுத்துவிட்டு சினிமாவில் என்று ஒதுங்கலாம் என்றிருந்தவர் அடுத்ததாக நடித்த ‘சந்திரமுகி’ என்ற படம் அவரை மேலும் புகழின் உச்சிக்கு இழுத்துச் சென்றது. இதைத்தொடர்ந்து ‘சிவாஜி’, ‘குசேலன்’, ‘எந்திரன்’ ஆகிய படங்களில் நடித்து தனது ரசிகர் பலத்தை தக்கவைத்துக் கொண்டார்.
ரஜினி தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் 154 திரைப்படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்தின் திரைப்படங்களுக்கு தமிழகத்தில் மாபெரும் வரவேற்பு கிடைக்கிறது. அவருடைய திரைப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கும், வெளியீட்டாளர்களுக்கும் அதிக லாபத்தை ஈட்டிக் கொடுக்கிறது. தமிழகத்தில் இவருக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் உள்ளன. இதுதவிர ஜப்பானிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.
ரஜினிகாந்த் 1981-ம் வருடம் பிப்ரவரி 16-ந் தேதி லதாவை மணந்தார். இவர்களுக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இருமகள்கள் உள்ளனர். மூத்தமகள் ஐஸ்வர்யாவை நடிகர் தனுசுக்கும், இளைய மகள் சௌந்தர்யாவை அஸ்வின் ராம்குமார் என்ற தொழிலதிபருக்கும் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
தன்னுடைய இளைய மகள் சௌந்தர்யா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் படம் முடிவடைந்து திரைக்குவர தயாராக உள்ளது. இந்த படம் வெளியானால் ஹாலிவுட் தரத்துக்கு ரஜினி பேசப்படுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.