புதுடெல்லி, டிசம்பர் 13 – இந்திய தண்டனை சட்டம் 377-வது பிரிவின்படி ஓரினச் சேர்க்கையானது குற்றம் என்று நேற்று முந்தினம் உச்ச நீதிமன்றம் உறுதிபடுத்தியது. இந்த தீர்ப்பு முரண்பாடாக உள்ளது என்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, நிதியமைச்சர் ப. சிதம்பரம், சட்ட அமைச்சர் கபில் சிபல் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானது என்று கூறும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இதனால், இப்பிரச்சினை குறித்து மத்திய அரசு ஆராயவுள்ளது.
இதுகுறித்து சோனியா காந்தி , “டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ஓரின சேர்க்கை சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது ஏமாற்றமளிக்கிறது. பாராளுமன்றம் இப்பிரச்சினை குறித்து பேசும் என்று நான் நம்புகிறேன். இந்த உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உட்பட அனைத்து இந்திய குடிமக்களின் வாழ்வையும் சுதந்திரத்தையும் அரசியலமைப்பு பாதுகாக்கும்” என தாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.