நியூ யார்க், ஜூன் 30 – அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஓரினச்சேர்க்கையை அங்கீகரிக்க வேண்டும் என மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினைக் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழங்கியது. அமெரிக்கத் தலைவர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை இந்தத் தீர்ப்பு சந்தித்து வந்தாலும், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் பலர் இந்தத் தீர்ப்பிற்கு அமோக ஆதரவை அளித்து வருகின்றனர்.
பேஸ்புக்கில் இந்தத் தீர்ப்பினை வரவேற்கும் விதமாகப் பலர் வானவில் நிறத்தில் தங்கள் புகைப்படங்களை மாற்றிக் கொண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதுவரை சுமார் 26 மில்லியன் மக்கள் இந்தத் தீர்ப்பை ஆதரிக்கும் விதமாக இந்த ‘டிரண்டை’ (Trend) உருவாக்கி உள்ளனர். இதில் பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், ஹாலிவுட் நட்சத்திரங்களான அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர், லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் பல அமெரிக்கத் தலைவர்களும் அடங்குவர்.
இதற்கிடையே ஓரினச்சேர்க்கை குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தத் தீர்ப்பிற்காக அமெரிக்கா பெருமைப்படுகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த அமெரிக்கர்களையும் ஒன்றிணைக்க முடியும். அவர்கள் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
ஹிலாரி கிளிண்டனும் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ள நிலையில், போபி ஜிண்டால், பிராங்க்ளின் கிரஹாம் உள்ளிட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.