லண்டன், டிச 13 – காப்புரிமை விவகாரம் காரணமாக , HTC One Mini திறன் பேசிகளை விற்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, மேல் முறையீட்டு நீதிமன்றம் தற்காலிகமாக விலக்கிக் கொண்டுள்ளதால், இனி அத்திறன்பேசிகள் பிரிட்டனில் விற்பனைக்கு வரும் என்று HTC நிறுவனம் அறிவித்துள்ளது.
நோக்கியா நிறுவத்தின் சில சொந்த தயாரிப்பு காப்புரிமைகளை, HTC மீறியுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, இம்மாத தொடக்கத்தில் HTC One Mini திறன்பேசிகள் பிரிட்டனில் விற்பதற்கு நீதிமன்றம் தடை விதித்தது.
இது குறித்து நோக்கியா (Nokia) வெளியிட்டுள்ள அறிக்கையில், “நோக்கியா கண்டுபிடிப்புக்களை எந்த ஒரு அனுமதியுமின்றி பயன்படுத்தி, அதற்கான நஷ்ட ஈடையையும் தராமல் தொடர்ந்து HTC நிறுவனம் பயனடைவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது துரதிருஷ்டவசமானது” என்று குறிப்பிட்டுள்ளது.
நீதிமன்றம் அனுமதி வழங்கியவுடன் HTC நிறுவனம் தனது HTC One Mini திறன் பேசிகளை உடனடியாக பிரிட்டனில் விற்பதற்குத் தயாராகி வருகிறது.
அடுத்த வருடத்தில், மேல் முறையீடு மனு முழுவதுமாக விசாரிக்கப்பட்டு, HTC One Mini திறன் பேசிகளை தொடர்ந்து விற்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் HTC நிறுவனம் உறுதியளித்துள்ளது.