கோலாலம்பூர், டிச 13 – சொத்துமதீப்பீட்டு வரி விதிப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று கூறும் சொத்துரிமையாளர்கள், வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் கூறியுள்ளார்.
வரும் டிசம்பர் 17 ஆம் தேதி வரை, சொத்துமதிப்பீட்டு வரி குறித்த தங்களது புகார்களையும், கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம் என்றும், ஆனால் அவற்றை பரிசீலிக்க கால அவகாசம் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
“ஆர்ப்பாட்டம் செய்யாதீர்கள்.. உங்கள் புகாரை மட்டும் பதிவு செய்யுங்கள்… ஏன் பிரச்சனையை உருவாக்குகிறீர்கள்?” என்று அட்னான் கேள்வி எழுப்பினார்.
மேலும், “நமக்கு பாதுகாப்பான நாடு தேவை. தாய்லாந்தை பாருங்கள்…. சிவப்பு சட்டைகள், மஞ்சள் சட்டைகள் …. எவ்வளவு பில்லியன் இழந்துள்ளார்கள் என்று தெரியுமா?” என்று டிபிகேல் பயிற்சி மையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அட்னான் கூறினார்.
சொத்துமதிப்பீட்டு வரி உயர்வுக்கு எதிராக வரும் டிசம்பர் 16 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாபெரும் பேரணியில் கலந்து கொள்ளுமாறு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு விடும் அழைப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அட்னான் இவ்வாறு அறிவுரை கூறியுள்ளார்.