Home அரசியல் நாடு திரும்பியுள்ள பழனிவேல் என்ன முடிவெடுப்பார்? பெரும் ஆர்வத்தில் ம.இ.கா.வினர்!

நாடு திரும்பியுள்ள பழனிவேல் என்ன முடிவெடுப்பார்? பெரும் ஆர்வத்தில் ம.இ.கா.வினர்!

705
0
SHARE
Ad

Palanivel-Sliderடிசம்பர் 15 – கட்சித் தேர்தல்கள் முடிந்ததும் கடந்த இரண்டு வாரங்களாக வெளிநாட்டில் இருந்துவிட்டு தற்போது ம.இ.கா தேசியத் தலைவர் பழனிவேல் நாடு திரும்பியுள்ளதாக ம.இ.கா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

#TamilSchoolmychoice

நாளை முதல் பணியில் ஈடுபடப்போகும் ம.இ.கா.வின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் (படம்), தன்னைச் சுற்றி எழுந்துள்ள அரசியல் எதிர்ப்புகளை எவ்வாறு முறியடிக்கப் போகின்றார், மறு தேர்தல் நடத்தப் பட வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கைகளை எவ்வாறு கையாளப் போகின்றார், அடுத்த என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றார் என்பதையெல்லாம் தெரிந்து கொள்ள ம.இ.காவினர் தற்போது ஆர்வமாக உள்ளனர்.

முதல் கட்டமாக, பழனிவேல், அடுத்த தலைமைச் செயலாளராக யாரை நியமிப்பார், அடுத்த தலைமைப் பொருளாளராக யார் நியமனம் பெறுவார் என்ற  ஆரூடங்களை அவர் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். அதன் பின்னர், தேர்தலில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க ஒரு குழுவை நியமிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்த குழுவிற்கு, ம.இ.காவின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் டான்ஸ்ரீ நிஜார் தலைமையேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனாலும், கட்சியின் துணைத் தலைவரான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும் அவர்தான் இந்த விசாரணையை நடுநிலைமையோடு மேற்கொள்ள முடியும் எனவும் சில ம.இ.கா தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பழனிவேல் மௌனம் கலைய வேண்டும் என முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ டி.மோகன் அறிவித்துள்ளார். இதற்கிடையில், பழனிவேலுவுக்கு எதிராக ம.இகா தலைமையகம் முன் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் பத்திரிக்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய செயலவை முடிவுகள் செல்லுமா?

அடுத்ததாக, பழனிவேல் முதல் மத்திய செயலவையைக் கூட்டி சில அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும். ஆனால், நடைபெற்று முடிந்த தேசிய உதவித் தலைவர்களுக்கான தேர்தலும், மத்திய செயலவைக்கான தேர்தலும் செல்லாது என சில வேட்பாளர்கள் ம.இ.கா தலைமையகத்திலும், சங்கப் பதிவதிகாரியிடத்திலும் புகார் கொடுத்திருப்பதால், அந்த புகார்கள் மீதான முடிவுகள் தெரியும் வரை மத்திய செயலவை அதிகாரபூர்வமாக செயல்பட முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு தொகுதித் தலைவர் குறிப்பிட்டார்.

தேர்தல் முறைகேடுகள் குறித்த புகார்கள் மீது சங்கப் பதிவதிகாரி முடிவு தெரிவிக்கும் வரை புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ம.இ.காவின் மத்திய செயலவை அதிகாரபூர்வமானதாக செயல்பட முடியுமா அல்லது அப்படியே செயல்பட்டு முடிவுகள் எடுத்தாலும் அந்த முடிவுகள் செல்லுபடியாகுமா என்ற சட்டபூர்வமான கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் கடுமையான அரசியல் நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் பழனிவேல் இவற்றையெல்லாம் சமாளிக்க எத்தகைய வியூகங்களைக் கையாளப் போகின்றார் என்பதை அறிந்து கொள்ள ம.இ.கா வட்டாரங்கள் ஆர்வத்துடன் தற்போது காத்திருக்கின்றன.

 (முக்கிய குறிப்பு: மேற்காணும் செய்திக் கட்டுரை செல்லியலுக்காக அதன் ஆசிரியர் குழுவினரால் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டதாகும். இந்த கட்டுரையையோ, அல்லது இதன் பகுதிகளையோ செல்லியலின்  முன் அனுமதியின்றி, மற்ற பத்திரிக்கைகளோ, மற்ற இணையத் தளங்களோ பிரசுரிக்கக் கூடாது. மீறிபிரசுரித்தால், மலேசிய சட்டங்கள்படி நடவடிக்கை எடுக்கப்படும்)