ஐதராபாத், டிச 17 – இந்தியாவின் ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும், சிங்கப்பூரின் டைகர் ஏர்வேஸ் நிறுவனமும் இணைப்பு விமான சேவைக்கு 3 ஆண்டுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.
இதன் மூலம், இந்தியா – சிங்கப்பூர் நாடுகளுக்கிடையே இரு நிறுவனங்களின் விமானங்களுக்கும் இணைப்பு விமான சேவை வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள பயணிகள் சிங்கப்பூர் செல்வதற்கு அகமதாபாத், போபால், சென்னை, கொல்கத்தா, கோவை, டெல்லி, கோவா, இந்தூர், மங்களூர், மதுரை, புனே, பெங்களூர், திருப்பதி, விசாகப்பட்டினம் ஆகிய 14 நகரங்களிலிருந்து ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் மூலம் ஐதராபாத் சென்று அங்கிருந்து டைகர் ஏர்வேஸ் விமானம் மூலம் சிங்கப்பூரை அடையலாம்.
அதேபோல், சிங்கப்பூரிலிருந்து டைகர் ஏர்வேஸ் விமானங்கள் மூலம் இந்தியா செல்லும் பயணிகள் ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் மூலம் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு செல்லும் வகையில் இந்த இணைப்பு விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்ஜீவ் கபூர் மற்றும் சிங்கப்பூர் டைகர் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி அலெக்ஸாண்டர் நிகே ஆகியோர் இது குறித்து கூறுகையில், “இந்த ஒப்பந்தம் மூலம் இரு நாட்டைச் சேர்ந்த பயணிகளும் பயனடைவார்கள்.அதோடு சுற்றுலா, தொழில், வர்த்தகம் ஆகியவையும் இரு நாடுகளுக்கிடையில் மேம்படும்” என்று தெரிவித்துள்ளனர்.
வரும் 2014 ஆம் ஆண்டு ஜனவரி 6ம் தேதியில் முதல் பயணிகள் இந்த புதிய சேவையைப் பெறலாம்.