நெல்லை, டிச 17 – கூடங்குளம் அருகே மீன் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், நேற்று நாட்டு வெடிகுண்டுகளை வீசி மீனவர்கள் மோதிக் கொண்டனர். இதில் 2 பேர் காயமடைந்தனர். கடலில் மீன் வளத்தை அதிகரிக்க தமிழக அரசு சுருக்கு மடி மற்றும் இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை விதித்துள்ளது.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் கூடங்குளம் அடுத்த இடிந்தகரையில் மீனவர்களில் ஒருதரப்பினர் சுருக்கு மடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கின்றனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக, அவர்களுக்குள் அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்தது. கடந்த 14ம் தேதி சுருக்குமடி வலை பயன்படுத்தியது தொடர்பாக இருதரப்பு மீனவர்களுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இது முற்றவே நேற்று இருதரப்பு மீனவர்களும் ஒருவரை ஒருவர் அரிவாளால் தாக்கத் தொடங்கினர்.
ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் சவேரியார் கோயில் அருகே இரு நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் இரண்டு மீனவர்கள் காயமடைந்தனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர்கள் வீடு திரும்பினர். வெடிகுண்டுகள் வீசப்பட்டது குறித்து வள்ளியூர் டிஎஸ்பி ஸ்டான்லி ஜோன்ஸ், கூடங்குளம் இன்ஸ்பெக்டர் ராஜபால் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயர் அதிகாரிகளின் உத்தரவு கிடைத்த பின்னரே, இடிந்தகரையில் வெடிகுண்டு சோதனை நடத்த இருப்பதாகவும், குண்டுவீச்சு குறித்து இதுவரை யாரும் புகார் செய்யவில்லை என்பதால் வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
கூடங்குளம் அருகே இப்படி அடிக்கடி மீனவர்கள் வெடிகுண்டுகளை வீசி மோதிக்கொள்வது போலீசாரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.இச்சம்பவத்தால் கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் இடிந்தகரையை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது