கோலாலம்பூர், டிச 17 – பாஸ் கட்சியின் பினாங்கு மாநில ஆணையராக அக்கட்சியின் துணைத்தலைவரான முகமட் சாபு நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் பினாங்கு மாநிலத்தில் பாஸ் கட்சியின் பொறுப்பு குறித்து பேராளர்கள் கடுமையாக விமர்சித்ததன் விளைவாக முகமட் சாபுவின் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
ஆனால் இதனை கட்சியின் பொதுச்செயலாளரான முஸ்தபா அலி மறுத்தார்.
மாட் சாபு நியமனத்திற்கும், பேராளர்களின் விமர்சனத்திற்கும் தொடர்பு இல்லை என்றும், கட்சியில் மறுசீரமைப்பு செய்யும் நோக்கில் தான் அவர் நியமிக்கப்பட்டார் என்றும் தெரிவித்தார்.
இது குறித்து கட்சியின் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டத்தோ முஸ்தபா அலி, “மாட் சாபு (முகமட் சாபு) பினாங்கு மாநிலத்தில் பிறந்தவர். எனவே அவருக்கு அந்த மாநிலத்தைப் பற்றி நன்கு பரீட்சயம் இருக்கும். அவர் நமது கட்சியின் துணைத்தலைவர் என்பதால், அவரது நியமனம் அம்மாநிலத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும்” என்று தெரிவித்தார்.
மேலும், “பக்காத்தான் உறுப்பினர்கள் மற்றும் அதன் உறுப்புக் கட்சிகளுக்கிடையே ஒரு நல்ல உறவை வளர்க்க மாட் சாபுவின் நியமனம் துணை புரியும்” என்றும் முஸ்தபா அலி குறிப்பிட்டார்.