புது டெல்லி, டிசம்பர் 18- இந்திய பெண் தூதர் கைது நடவடிக்கையில் அமெரிக்கா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும் வரை அந்நாட்டுக்கு எதிரான நெருக்குதல் நடவடிக்கை தொடரும் என இந்தியா அறிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தடுப்புச் சுவர்களை அகற்றி தூதரகத்திற்கென அளிக்கப்பட்டிருந்த சிறப்பு பாதுகாப்பினை அகற்றிவிட்ட இந்தியா இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என்று கூறியுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கமல்நாத் ஒவ்வொரு நாட்டுக்கும் என தனிப்பட்ட கௌரவம் இருப்பதை அமெரிக்கா புரிந்து கொள்ள வேண்டும் என்றார். அமெரிக்கா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும் வரை அந்நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்று அவர் கூறினார்.
அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிர்கட்சியான பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனிடையே இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கும், தூதரக அதிகாரிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது இந்தியாவின் கடமை என்று அமெரிக்கா கூறியுள்ளது.
இந்திய தூதர் விவகாரத்தில் வதந்திகள் பரவி இருப்பதாக கூறியுள்ள அமெரிக்காவின் செய்தி தொடர்பாளர் மேரி ஹார் இந்த விவதாரத்தில் அனைத்து உண்மைகளையும் அறிய வேண்டியுள்ளது என்றார். தூதர் விவகாரத்தால் இரு நாட்டு உறவு பாதிக்கப்படாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
நியூயார்க்கில் இந்திய தூதரகத்தில் தூதராக உள்ள தேவயானி கோப்ரகடே பணிப் பெண்ணுக்கு விசா பெற்றது தவறான தகவல் அளித்ததாக கைது செய்யப்பட்டார். பொது இடத்தில் கைவிலங்கிட்டு அழைத்து செல்லப்பட்டதோடு போதை அடிமைகளோடு சிறையில் அடைக்கப்பட்டதே இந்தியாவின் கோபத்திற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.