புதுடெல்லி, டிசம்பர் 21 – கடந்த ஆண்டு அமெரிக்காவில் இந்திய துணைத் தூதராகப் பணியாற்றியபோது சர்ச்சையில் சிக்கிய தேவ்யானி கோப்ரகடே (படம்) மீது மத்திய அரசு தற்போது திடீர் நடவடிக்கை எடுத்துள்ளது. அவர் வெளியறவு அமைச்சு பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நியூயார்க்கில் இந்திய துணைத் தூதராகப் பணியாற்றி வந்தார் தேவ்யானி. அவர் இந்தியாவிலிருந்து அழைத்துச் சென்ற பணிப்பெண்ணுக்கு மிகக் குறைவான ஊதியம் வழங்கினார் என்று புகார் எழுந்தது. இதையடுத்து அமெரிக்க காவல்துறை அவரை கைது செய்தது. மேலும் அவரது ஆடைகளை களைந்து சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இச்சம்பவத்திற்கு இந்திய தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்த போதும், அமெரிக்க அரசு தான் மேற்கொண்ட நடவடிக்கையை நியாயப்படுத்தியது. இந்நிலையில் ரூ.1.5 கோடி பிணைத் தொகையில் தேவ்யானி பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அச்சமயம் தேவ்யானிக்கு ஆதரவாக ஒட்டுமொத்த இந்தியாவும் திரண்டது. எனினும் சில தினங்களிலேயே அவரது குடும்பத்தார் மீது வேறு சில புகார்கள் எழுந்தன.
குறிப்பாக மும்பையில் கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களுக்காக கட்டப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்பில் தேவ்யானியின் தந்தை முறைகேடாக வீடு வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் அரசுப் பணிக்காக சென்ற தேவ்யானி, தனது குழந்தைகளுக்கு அமெரிக்காவில் குடியுரிமை பெற்றதாகவும் தெரிகிறது.
இவை குறித்து அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், குறிப்பிட்டிருந்தார் தேவ்யானி. இதையடுத்து அரசு அனுமதியின்றி பேட்டியளித்தது மற்றும் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை பெற்றதை மறைத்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் மீது மத்திய அரசு தற்போது நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
நாடு திரும்பிய பின்னர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் கூட்டு வளர்ச்சிப் பிரிவின் இயக்குனராக பொறுப்பேற்றார் தேவ்யானி. தற்போது அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ள அவர் மீது, மேலும் துறை ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை காரணமாக அரசுப் பணியிலிருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என்றும், பணி தொடர்பான விதிமுறைகள் எதனையும் தாம் மீறவில்லை என்றும் தேவ்யானி கோப்ரகடே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.