கோலாலம்பூர், டிசம்பர் 21 – அதிகாரத்தில் நீடிக்க மலாய்க்காரர்கள் கையேந்த வேண்டி உள்ளது என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தெரிவித்துள்ளார். பிற இனத்தவர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளும் வழிமுறையை அறிமுகப்படுத்திய மலாய்க்காரர்கள், இருப்பதிலேயே வலுவிழந்த சமுதாயமாக மாறக்கூடிய நிலை உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த கால அனுபவங்களிலிருந்து மலாய் சமுதாயம் பாடம் கற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், இதன் மூலம் வருங்காலத்தில் அரசியல் அதிகாரத்தை இழந்துவிடாமல் அச்சமுதாயம் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் மலாய்க்காரர்கள் 60 விழுக்காட்டினர் உள்ளனர். ஆனால் 3 அரசியல் கட்சிகளாக மலாய் சமுதாயம் பிரிந்துள்ளது. எனவே நம்மால் பெரும்பான்மை பலம் கொண்ட அரசாங்கத்தை அமைக்க முடியவில்லை.
“பெரும்பான்மை பலம் பெறுவதற்காக மலாய் கட்சிகள் பிற இனத்தவர்களிடம், குறிப்பாக சீனர்களிடம் கையேந்த வேண்டியுள்ளது. அம்னோ ஆகட்டும், பாஸ் அல்லது பிகேஆர் ஆகட்டும், வாக்குகளுக்காக கையேந்த வேண்டியுள்ளது” என்றும் மகாதீர் கூறினார்.
“நாம் கையேந்துபவர்களாக இருப்பின் சக்தி மிக்கவர்களாக இருக்க முடியாது. ஏனெனில் கையேந்துபவர்களிடம் அரசியல் அதிகாரம் இருக்காது,” என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.
மலாய் சமுதாயத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டுமானால் இஸ்லாமிய கொள்கைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.