கோலாலம்பூர், டிசம்பர் 21 – விமான நிலையங்களில் தான் விமானங்கள் அதிகளவு விபத்துக்களைச் சந்திக்கின்றன என்பது அண்மைய ஆய்வின் வழி தெரிய வந்துள்ளது.
எம்.எச்.370 மற்றும் எம்.எச்.17 ஆகிய இரு விமானப் பேரிடர்களால் மிகப் பெரும் இழப்புகள் ஏற்பட்டிருந்தாலும், பொதுவாக விமான நிலையங்களில் ஏற்படக்கூடிய விபத்துக்கள் மற்றும் குறைபாடுகள் காரணமாகவே அதிகளவு காப்பீட்டுத் தொகை கோரப்படுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
பிரபல அலையன்ஸ் குளோபல் குழுமம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. விமானங்கள் பறக்கத் தொடங்கும் முன்பே ஏற்படக்கூடிய தொழில் நுட்பக் கோளாறுகள் மற்றும் தரைக் கட்டுப்பாட்டு இயந்திரங்களில் ஏற்படக்கூடிய சேதங்கள் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்படுவது தற்போது அதிகரித்து வருகிறது.
கடந்த சில ஆண்டுகளில் இத்தகைய காரணங்களால் அளிக்கப்பட்டுள்ள காப்பீட்டுத் தொகை அதிகரித்துள்ளதாக மேற்கண்ட ஆய்வு கூறுகிறது.
விமான நிலையங்களில் விமானங்கள் சந்திக்கக்கூடிய விபத்துக்களால் ஆண்டுதோறும் உலகளவில் 35 பில்லியன் ரிங்கிட் அளவிற்கு விமானத்துறை இழப்புகளை எதிர்கொள்வதாக தெரிய வந்துள்ளது. பெரும்பாலான சம்பவங்களுக்கு தகவல் தொடர்பில் ஏற்படும் குறைபாடுகளே காரணம் எனவும் தெரிய வந்துள்ளது.
விமானங்களுக்கு இடையேயான தகவல் தொடர்பு மற்றும் தரைக் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு ஆகியவற்றில் நிலவும் குறைபாடுகள் காரணமாகவே 80 விழுக்காடு விபத்துக்கள் நேர்கின்றன.
“வெளிப்பொருட்கள் காரணமாகவும் விபத்துக்கள் நிகழ்கின்றன. குறிப்பாக பறவைகள் மீது மோதுவது, ஓடுபாதையில் செல்லும்போது வரிக்குதிரைகள் மற்றும் மாடுகள் ஆகியவை குறுக்கிடுவது காரணமாகவும் விபத்துக்கள் நேர்கின்றன,” என்கிறார் அலையன்ஸ் நிறுவனத்தின் ஐரோப்பிய மற்றும் ஆசிய பெசிபிக் தலைவரான ஹென்னிங் ஹேகன்.
விமானங்கள் எதிர்கொள்ளும் மற்ற மோசமான விபத்துக்களுக்கு விமானிகளின் சோர்வு மற்றும் மனிதத் தவறுகளே காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதே சமயம் விமானங்களில் தானியங்கி இயங்கு முறை மேம்பட்டிருப்பதால் அண்மையக் காலங்களில் விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2012ல் நிகழ்ந்த விமான விபத்துக்களில் 88 விழுக்காடு ஆப்பிரிக்காவிலும் (45%), ஆசியாவிலும் (43%) நிகழ்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன..