கோலாலம்பூர், டிசம்பர் 21 – இணையத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அசுர வளர்ச்சியைக் கண்டு வருகின்றது. அனைத்து கண்டுபிடிப்புகளிலும் நன்மை, தீமை இரண்டும் கலந்திருக்கிறது, அதேபோல் தான் இணையமும். எனினும், இணையத்தின் நன்மையை விட தீமை வெகு விரைவாக அனைவரையும் சென்றடைகிறது.
அதில் தற்போது குறிப்பிட்டு கூறும்படி பரவி வரும் மோசடி தான் ‘செக்ஸ்டார்ஷன்’ (Sextortion) என்று அழைக்கப்படும் பாலியல் ரீதியான மிரட்டல் மோசடிகள்.
சைபர் குற்றங்களால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள் தான். ஆனால், இந்த செக்ஸ்டார்ஷன் மோசடி ஆண்களை மையப்படுத்தி உருவாக்கப்படுபவை. உலகம் முழுவதும் இணையம் வழியாக நடக்கும் இந்த மோசடிக்கு தினந்தோறும் ஆயிரக் கணக்கான ஆண்கள் பலியாகி வருகின்றனர்.
இந்த மோசடியின் முதற்கட்டம், சமூக வலைத்தளங்கள் மூலமாக ஆண்களை வசீகரித்து இழுப்பது. பின்னர் அவர்களின் பலவீனங்களை அறிந்து, அதை வைத்தே அவர்களை மிரட்டி பணம் பறிப்பது.
இணையம் மூலம் இவ்வாறு பணம் பறிக்கும் மோசடிகள் முதன் முதலாக பிலிப்பைன்ஸ் நாட்டில் பரவத் தொடங்கி இருக்கின்றன. சமீபகாலத்தில் அங்கு இது ஒரு பெரும் தொழிலாகவே வளர்ந்திருப்பதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் குறித்து பிலிப்பைன்ஸ் காவல்துறையின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த மோசடிப் பேர்வழிகள் ஒருநாளைக்கு நூற்றுக்கணக்கான அமெரிக்க டாலர்களை, ஏமாறும் நபர்களிடமிருந்து பெறுகிறார்கள். இப்படி செயற்படும் மோசடிக் கும்பல்களின் ஒரு பகுதியினரை சமீபத்தில் கண்டுபிடித்தோம். இது தொடர்பாக நடத்தப்பட்ட அதிரடி சோதனையின் போது, பல இளம் பணியாளர்கள் இதற்காக முழுநேர வேலை கொடுக்கப்பட்டு இருந்தது அதிர்ச்சியளித்தது.”
“அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அழகான பெண்ணிடமிருந்து ஆண்களுக்கு இணையம் மூலம் அழைப்புகள் அனுப்பப்படும். அந்த அழைப்புகளுக்கு பதில் அளிக்கும் ஆண்களே அவர்களின் இலக்காக மாற்றப்படுவர். அடுத்த கட்டமாக, இணைய கேமரா மூலம் அவர்களுடன் பேசப்படும் அந்தரங்க உரையாடல்கள் பதிவு செய்யப்படும். அதன் மூலம் அவர்கள் பணத்திற்காக மிரட்டப்படுவர்” என்று அவர் கூறியுள்ளார்.
இதில், இணைய வழியாக ஆண்களுடன் பேசும் பெண்கள், பெரும்பாலும் கணினியில் முன்பதிவு செய்யப்பட்ட காணொளிகள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.