வாஷிங்டன், டிசம்பர் 21 – பாகிஸ்தானின் இராணுவ பாதுகாப்பிற்கு அமெரிக்கா கூடுதலாக 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிதி வழங்க உள்ளது. பெஷாவர் தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதிகளை வேரறுக்கும் முயற்சியில் உள்ள பாகிஸ்தானின் இராணுவச் செலவுகளுக்காக இந்த நிதி வழங்கப்படுவதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமா இந்த ஆண்டின் மிகப் பெரிய பாதுகாப்புக் கொள்கை மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார். வழக்கத்தை விட பாதுகாப்பிற்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ள இந்த தீர்மானத்தில், ஒட்டு மொத்தமாக 578 பில்லியன் டாலர் வரை செலவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதியில் கூடுதலாக 1 பில்லியன் டாலர்கள் வழங்கப்படவுள்ளது.
எனினும், பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதிக்கு சில நிபந்தனைகள் உண்டு. குறிப்பாக, பாகிஸ்தானில் செயல்படும் ஹக்கானி கும்பல் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த ஆவணங்களை அந்நாடு சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
எனினும், தற்போது வரை இது தொடர்பாக எந்தவொரு ஆவணங்களையும் பாகிஸ்தான் சமர்ப்பித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.