புதுடில்லி, ஜனவரி 11 – சர்ச்சைக்குள்ளான அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரக அதிகாரி தேவயானி கோப்ராகேட் மீது போலி விசா தயாரிப்பு மீதான குற்றச்சாட்டுக்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டு அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
இதற்கு தக்க தூதரக பதிலடியாக, தேவயானியின் பதவிக்கு நிகரான பதவி வகிக்கும் அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவரை புதுடில்லியிலிருந்து இந்திய அரசாங்கம் வெளியேற்றியுள்ளது.
அந்த அமெரிக்க தூதரக அதிகாரி, தேவயானி விவகாரத்திலும் பின்னர் அவர் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்ட விவகாரத்திலும் அணுக்கமாக செயல்பட்டவர் என்றும் புதுடில்லியிலுள்ள இந்திய அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
நேற்று வெள்ளிக்கிழமை இந்தியாவிற்குத் திரும்பும் முன்னால் இந்தியாவின் பிரஸ் டிரஸ்ட் செய்தி நிறுவனத்திடம் பேசிய தேவயானி “என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. போலியானவை. அதனை நிரூபிக்கும் தருணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றேன். காலம் என்னை நிரபராதி என நிரூபிக்கும்” என்று கூறினார்.
அவரது குழந்தைகள் இன்னும் அமெரிக்காவில்தான் இருக்கின்றனர். இந்த சம்பவத்தால் தனது குடும்பத்தின் மீதும் தனது குழந்தைகள் மீதும் நிரந்தரக் களங்கம் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
தேவயானி நாடு திரும்பிய அதே வேளையில், அவர் மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வழக்கைப் பதிவு செய்தது. இதன் காரணமாக அவர் முழு தூதரக அந்தஸ்தோடு இந்தியாவுக்கு திருப்ப அனுப்பப்பட்டாலும், அத்தகைய தூதரக அந்தஸ்து இல்லாமல் அமெரிக்காவுக்கு எதிர்காலத்தில் திரும்பினால், அவர் தன்மீது சுமத்தப்பட்டுள்ள வழக்கைச் சந்திக்கவேண்டியிருக்கும் என அரசாங்கத்தின் தலைமை வழக்கறிஞர் பிரிட் பராரா அறிவித்துள்ளார்.
தனது வீட்டு வேலைக்காரருக்காக போலி விசா ஆவணங்களைத் தயாரித்த குற்றத்தின் பேரில் கடந்த டிசம்பரில் கைது செய்யப்பட்ட தேவயானி, ஆடை களையப்பட்டு சோதனை செய்யப்பட்டார் என்றும் மற்ற குற்றவாளிகளுடன் ஒன்றாக வைக்கப்பட்டார் என்றும் புகார்கள் எழுந்தன. பின்னர் 250,000 அமெரிக்க டாலர் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையில் தூதரக உறவுகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நாடு திரும்பிய தேவயானி “எனது அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சின் எனது சக பணியாளர்கள், நாட்டின் அரசியல் தலைமைத்துவம், தகவல் ஊடகத் துறையினர், எல்லாவற்றுக்கும் மேலாக எனக்குத் துணை நின்ற இந்தியாவின் பொது மக்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நானும் எனது அரசாங்கமும் எடுத்த நிலைப்பாட்டினால் என்மீதுள்ள களங்கம் விரைவில் துடைக்கப்படும்” என்றும் தேவயானி கூறினார்.