ஜனவரி 11 – ஒட்டு மொத்த மதுரை ஜில்லாவையும் தன் கைப்பிடியில் வைத்திருக்கும் தாதா சிவனாக மோகன் லால். அவரின் குடும்பத்தை எதிர் கோஷ்டிகள் ஒரு முறை தீர்த்து கட்ட வர, லாலின் கார் ஓட்டுனரின் மகனான சக்தி, (சிறு வயது) விஜய் அவர்களை காப்பாற்றுகிறார்.
அதே சம்பவத்தில் தன் தந்தையையும் ஒரு போலிஸ்காரன் கையால் இழக்க, தன் சொந்த மகனைப் போல விஜயை தத்தெடுத்து வளர்க்கிறார் லால். மோகன் லாலில் தாதாயிஸ சாம்ராஜியத்தின் ‘தளபதியாக’ வளர்கிறார் விஜய்.
தன் தந்தையின் சாவுக்கு காரணமான காக்கி சட்டையின் மீதான வெறுப்பு மட்டும் விஜய்க்கு இன்னும் அடங்கவில்லை (தன் வீட்டின் கூர்க்காவுக்கு கூட கலர் சட்டைதான் என்கிற அளவுக்கு!). ஆனால் மோகன் லாலின் தொழிலுக்கு காவல் துறையினரால் கெடுபிடி வரத் துவங்க, ‘நம்மல்ல ஒருத்தன் போலிஸா இருந்தாதான் நாம ஒழுங்கா தொழில் பண்ண முடியும்’ என்று முடிவெடுத்து, தன் சகல செல்வாக்கையும் பயன்படுத்தி நம்பிக்கைக்குரிய வளர்ப்பு மகனான விஜய்க்கு வற்புறுத்தி காக்கி சட்டையை போட வைக்கிறார்.
ஒரு சராசரி சினிமா ரசிகனால் எளிதில் யூகிக்க முடிந்த சில திருப்பங்களுக்கு பிறகு மோகன் லாலும் விஜயும் எதிரெதிர் துருவங்களாகச் செல்ல, மீதி என்ன என்பதே இந்த ஜில்லாவின் கதை.
கவரும் விஜய்…
சுமார் ரக ‘தலைவா’வில் படம் முழுவதும் இறுக்கமான முகத்துடனே வந்த விஜய்க்கு இதில் முற்றுலும் நேர்மாறான பாத்திரம். தன் இளமைத் தோற்றத்திலும் துள்ளலான உடல் மொழியிலும் ரசிகர்கள் மனதை கவர்கிறார் இளைய தளபதி.
முக்கியமாக வசன உச்சரிப்பில் தன் முந்தைய படங்களை விட கொஞ்சம் அதிகமாகவே உழைத்திருக்கிறார். ‘இந்த ஊர்ல தப்பு பண்றவன் எல்லாரும் என் மாம.. மச்சானுங்க..’ எனும்பொழுதும், ‘ஐ எம் வெரி ஹேப்பி..!’ என்று சில முறை பன்ஞ் அடிக்கும் பொழுதும் திரையரங்குகளில் கைத்தட்டல்கள் அதிர்கின்றன. வழக்கம் போல் துள்ளல் நடனத்திலும் அதிரடி சண்டைக் காட்சிகளிலும் தன்னுடைய ரசிகர்களுக்கு எந்த ஏமாற்றத்தையும் அவர் தரவில்லை.
தன் கம்பீரமான தோற்றத்திலும், கணீர் குரலிலும் (கொஞ்சம் மலையாளம் கலந்த!), மதுரை தாதாவாக மோகன் லால் கனகச்சிதம். முதல் பாதியில் வளர்ப்பு மகனானாலும் பாசத்தை அள்ளி வழங்குவதிலாகட்டும், பின் பாதியில் தான் வளர்த்தவனே தனக்கு எதிராக செயல் படும் பொழுது கோபத்தில் பொங்கி எழுவதிலாகட்டும், தனது சீனியாரிட்டியை நிருபித்திருக்கிறார் மோகன் லால்.
காஜல் அகர்வால் படத்தின் கதாநாயகி. அவ்வளவே!
பரோட்டா சூரியின் நகைச்சுவை சில இடங்களில் மட்டும் சிரிப்பொலியை வரவழைக்கிறது. இது தவிர ‘மங்காத்தா’ மஹட், பூர்ணிமா பாக்கியராஜ், ரவி மரியா, என சக நடிகர்கள் அனைவரும் தனக்கான வேலை வரும்பொழுது மட்டும் படத்தில் வந்து போகின்றனர். நடிகர் சம்பத்தின் பாத்திர தேர்வு மட்டும் கச்சிதம்.
இயக்குநரில் இரண்டாவது படம்...
படத்தின் திரைக்கதை மற்றும் இயக்கம் ஆர்.டி.நேசன். தனது இரண்டாவது படத்திலேயே இரு பெரிய நடிகர்களை இயக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறார். பல இடங்களில் காட்சியமைப்புகளிலும் வசனங்களையும், நகைச்சுவை உணர்வோடு கையாண்ட விதத்தில் நேசன் கவனத்தை ஈர்க்கிறார். ஆனால் முதல் பாதி திரைக்கதையில் தந்திருக்கும் விறுவிறுப்பை இரண்டாவது பாதியில் தக்க வைத்திருக்க வேண்டாமோ?
இடைவேளைக்கு பிறகு கதையை எங்கு எடுத்து செல்வது என்று தெரியாமல் இயக்குனர் திணறியிருக்கிறார். அதில் வரும் தங்கச்சி கல்யாண சென்டிமென்ட் காட்சிகள் அனைத்தும் கதைக்கு தேவையில்லாத எபிசோட்!
கடந்த ஓரிரு ஆண்டுகளில் முன்னணி இசையமைப்பாளர் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் டி. இமான்தான் இந்தப் படத்திற்கும் இசை. ஆனால் விஜய் குரலில் ஒலித்த ‘கண்டாங்கி சேலை’ பாடலைத் தவிர வேறு எதுவும் மனதில் பதிய மறுக்கிறது. ஆர் கணேஷின் ஒளிப்பதிவும் டோன் மாக்ஸின் படத்தொகுப்பும் ஒரு மசாலா படத்துக்கான அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்திருக்கின்றன. இரண்டாம் பாதியில் பல இடங்களில் இழுவை. படத்தொகுப்பாளர் கொஞ்சம் கரிசனம் காட்டாமல் கத்திரிக்கு வேலை கொடுத்திருக்கலாம்.
கடைசி அரை மணி நேரத்தில் கதையில் வரும் திருப்பங்களும், முதன்மை கதாப்பாத்திரங்களுக்கு வரும் மனமாற்றங்களும் தமிழ் சினிமா இதுவரை பார்த்திராதது என்று ஏதும் இல்லை. படத்தின் நீளம், எளிதில் யூகிக்க கூடிய முடிவு என குறைகள் சில இருந்தாலும், விஜய்-மோகன் லால் கூட்டணிக்காக ஒரு முறை போய் வரலாம் இந்த ‘ஜில்லா’வுக்கு.
– செல்லியல் விமர்சனக் குழு
ஜில்லா முன்னோட்டம்