Home இந்தியா கருணாநிதி – அழகிரி சந்தித்து மீண்டும் சமாதானம்!

கருணாநிதி – அழகிரி சந்தித்து மீண்டும் சமாதானம்!

452
0
SHARE
Ad

Alagiri-MK-300-x-200சென்னை, ஜனவரி 12 – ஒவ்வொரு முறையும் அரசியல் பிரச்சனை எழும்போதும், மகன் அழகிரி எதிர்த்து ஏதாவது பேசுவதும், பின்னர் அதற்கு கருணாநிதி எச்சரிப்பதும், சில நாட்களுக்குப் பின்னர் இருவரும் சந்தித்துக் கொண்டு சமாதானமாவதும் தமிழக அரசியலில் அடிக்கடி அரங்கேறும் காட்சிகளில் ஒன்று.

#TamilSchoolmychoice

அண்மையில் ஒரு தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் விஜய்காந்த் கட்சியுடன் கூட்டணி வைத்தால் திமுக எப்படி உருப்படும் என அழகிரி கருத்து கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து கட்சிக் கட்டுப்பாட்டை மீறுகின்றவர்கள் அழகிரி உட்பட யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என கருணாநிதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதன் விளைவாக, அழகிரி ஆதரவாளர்கள், ஐந்து பேர் மீது, தற்காலிக நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நேற்று கருணாநிதியை அவரது வீட்டில் சந்தித்து  அழகிரி அரை மணி நேரம் பேசியுள்ளார். தந்தைக்கு பொங்கல் வாழ்த்து சொல்ல வந்தேன் என அவர் அழகிரி சந்திப்புக்குப் பின் கூறினாலும், அவரது நடவடிக்கையால் கடும் கோபம் அடைந்திருந்த கருணாநிதி, அதை அழகிரியிடம் நேரிடையாக கொட்டித்  தீர்த்துள்ளார் என தமிழக பத்திரிக்கைகள் தெரிவித்துள்ளன.

நேற்று காலை, 10:15 மணிக்கு, மகள் கயல்விழி, மருமகன் வெங்கடேஷ் ஆகியோருடன், அழகிரி, கோபாலபுரம் சென்றார்.உள்கட்சி விவகாரம், குடும்பப் பிரச்னை, குற்றச்சாட்டுகள் என, அரை மணி நேர பேச்சு வார்த்தையில் அனல் பறந்திருக்கிறது என்கின்ற அளவுக்கு கருணாநிதி கடும் கோபத்தை கொட்டி தீர்த்துவிட்டார் என அந்த சந்திப்பு குறித்து கூறப்படுகிறது.

கருணாநிதி அழகிரியிடம் கூறியது என்ன?

கருணாநிதி பின்வருமாறு அழகிரியிடம் கூறியதாக தமிழகத்தின் தினமலர் பத்திரிக்கை ஆரூடம் வெளியிட்டுள்ளது.

ஒரே இடத்தில் உட்கார்ந்து, நீ அரசியல் நடத்துகிறாய். ஸ்டாலின், ஊர் ஊராக சுற்றி அரசியல் நடத்துகிறான். உன் பேச்சை கேட்டு, அவனை விட்டு விட்டால், கட்சியை நடத்த முடியாது. கட்சியில், கட்டுப்பாடு முக்கியம். அதை நீயும், உன் ஆதரவாளர்களும் மதிப்பதே இல்லை. நடவடிக்கை எடுத்தால், ‘என் ஆதரவாளர்கள்மீது கை வைப்பதா?’ என, நியாயம் கேட்க வந்து விடுகிறாய். உன் கூட இருக்கற ஆதரவாளர்கள் எப்படிபட்டவர்கள் என, முதலில் பார். உன்னை வாழ்த்தி போஸ்டர்ஒட்டினால் போதுமா? கட்சி வளர்ந்து விடுமா? நடந்த விஷயங்களை பார்த்தால், உன் மீதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதற்கு காரணம், என்னால் எடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.நீயே சொல்லியிருக்கிறாய், தென் மண்டலஅமைப்பு செயலர் பதவியை நான் கேட்கவில்லை என்று. அந்த பதவி, கேட்காமலேயேகொடுக்கப்பட்டது. அதை வைத்துக் கொண்டு, இந்த நேரத்தில், ‘ஆக்டிவாகசெயல்படவேண்டாமா?”

உன் மீதும், உன் மகன் மீதும் ஜெயலலிதா, வழக்கு போட்டதாக சொல்கிறாய். ஸ்டாலின் மீதும் தான் வழக்கு போடப்பட்டுள்ளது. சட்டப்படி சந்திக்க வேண்டியது தான். ஆதரவாளர்கள் எல்லாரையும், ஸ்டாலின் இழுத்துவிட்டதாக, புகார் கூறுகிறாய்; ஏன் ஓடினார்கள்? மீன் இருக்கும் குளத்தை நோக்கித்தான், கொக்கு போகும்.இனியும் இப்படி நடந்து கொள்ளாதே; பேட்டிஎதுவும் கொடுக்காமல், அமைதியாக இரு; பொங்கலுக்கு பின், பேசிக்கொள்ளலாம்.

இவ்வாறு, கருணாநிதி அழகிரியிடம் தன் கோபத்தைக் கொட்டித் தீர்த்ததாக கூறப்படுகிறது.

அதற்கு, அழகிரியும் அவ்வப்போது சூடாக பதில் அளித்துள்ளார். ஆனாலும், கருணாநிதியின் கோபமும் சூடான பேச்சும், அவரை அமைதிப்படுத்தி விட்டது என்றும், கடைசியில், அழகிரிக்கு ஆறுதலாக, ‘தை பிறந்தால் வழி பிறக்கும்என, பேசி அனுப்பிவைத்துள்ளார் என்றும், தி.மு.க., வட்டாரம் தெரிவித்தது என்றும் தினமலர் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, மதுரை திரும்பும்அழகிரி, கருணாநிதியுடன் நடந்த சந்திப்பு பற்றி தன் ஆதரவாளர்களிடம் கூறி, அடுத்த கட்டம் குறித்து முடிவெடுக்கவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.