கோலாலம்பூர், டிசம்பர் 21 – குண்டர்கள் கதாநாயகர்களாக சித்தரிக்கப்பட மஇகா ஒன்றும் திரைப்படம் அல்ல என்று டத்தோஸ்ரீ பழனிவேல் தெரிவித்துள்ளார். ரவுடித்தனத்துக்கும் அராஜகப் போக்கிற்கும் மஇகாவில் இடம் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
இத்தகைய செயல்பாடுகளையும் மோசமான அரசியல் கலாச்சாரத்தையும் மஇகாவினர் அனுமதிக்கக் கூடாது என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
“மஇகாவில் உள்ள பெரும்பாலானவர்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டு, தனிப்பட்ட விருப்பங்களை பின்னுக்குத் தள்ளி, சமுதாய நலனே முக்கியம் என்று செயல்படக் கூடியவர்கள். மஇகாவில் குண்டர்களின் ஆதிக்கத்தை அனுமதிக்கக் கூடாது. மஇகா தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு இடையூறு செய்கிறார்கள் எனில் ஏதோ தவறு நிகழ்கிறது என்று அர்த்தம். நடந்தவை குறித்து இந்திய சமுதாயம் நிச்சயம் வெட்கப்பட்டிருக்கும். தாங்கள் கைவிடப்பட்டதாகவும் அச்சமுதாயம் நினைத்திருக்கும்” என்றும் பழனிவேல் கூறியிருக்கின்றார்.
கட்சி, சமுதாயம் பற்றிய பல விவகாரங்களில் கருத்து ஏதும் கூறாமல் மௌனம் காக்கும் பழனிவேல், மஇகா தலைமையகம் முன் நடந்த ஆர்ப்பாட்டம் குறித்து மட்டும் உடனடியாக தன் கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றார்.
“இந்தச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் முதலில் தங்களையே ஒருமுறை பார்த்துக் கொள்ளட்டும். அவர்களின் இந்தச் செயல்பாட்டால் இந்தியர்களுக்கு ஏதேனும் நன்மை விளைந்துள்ளதா? என்று தங்களிடமே கேள்வி கேட்டுக்கொள்ளட்டும். இத்தகைய நடத்தையை அவர்கள் அனுமதிப்பார்களா?” என்று பழனிவேல் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பல விவகாரங்கள் தொடர்பில் குரல் கொடுப்பதில்லை என தன்னைப் பற்றிய எழுந்துள்ள விமர்சனம் குறித்து விளக்கம் அளித்துள்ள அவர், மஇகா அரசாங்கத்தில்தான் பங்கேற்றுள்ளது என்றும், அது எதிர்க்கட்சியல்ல என்றும் கூறியுள்ளார்.
“அனைத்து விஷயங்களையும் நான் அமைச்சரவைக் கூட்டத்தில் பேசுகிறேன். பிரதமருடன் நேரடியாகப் பேசும் வாய்ப்புள்ளது. முடிவுகள் எடுக்கக் கூடிய அமைச்சரவையில் எனது குரல் வலுவாக, அழுத்தமாக ஒலிக்கிறது. வெளியிலிருந்து கூக்குரலிடுவதும், தடாலடியாகச் செயல்படுவதும் விளம்பரத்திற்காக செய்யப்படுபவை. அவற்றால் எந்த தீர்வும் கிடைக்காது. கடந்த பொதுத்தேர்தலில் இந்தியர்களின் வாக்குகளை திரும்பப் பெறுவதில் மஇகா வெற்றி கண்டுள்ளது. அமைச்சரவையில் மஇகாவின் பிரதிநிதித்துவத்தும் நான் கட்சித் தலைவராக பொறுப்பேற்றதும் அதிகரித்துள்ளது,” என்று பழனிவேல் தெரிவித்துள்ளார்.
கோவில்கள், தமிழ்ப் பள்ளிகளுக்கு அளிக்கப்படும் நிதியும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், உண்மை நிலவரத்தையும், புள்ளி விவரங்களையும் முன்வைத்துப் பேசுவதே சரியாக இருக்கும் என்றார்.
“மாறாக காரணமற்ற, ஆத்திரக் குரல்களுக்கு செவிசாய்த்து நல்ல மற்றும் கடுமையான உழைப்பை சீர்குலைத்துவிடக் கூடாது. சமுதாயத்திற்கு உதவும் பணியில் ஈடுபட்டுள்ளது மஇகா. குண்டர்கள் கதாநாயகர்களாக மாற இக்கட்சி ஒன்றும் திரைப்படம் அல்ல. அதிக தேவைகளுக்காக காத்திருக்கும் மக்களை நினைத்தே நாங்கள் கவலைப்படுகிறோம்,” என்று பழனிவேல் மேலும் கூறியுள்ளார்.