Home இந்தியா க.அன்பழகனுக்கு 93-வது பிறந்த நாள் – கருணாநிதி புகழாரம்!

க.அன்பழகனுக்கு 93-வது பிறந்த நாள் – கருணாநிதி புகழாரம்!

853
0
SHARE
Ad

சென்னை, டிசம்பர் 21 – பேராசிரியர் க.அன்பழகனின் 93-வது பிறந்தநாளுக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட  அறிக்கையில்;

“ஒவ்வொருவரும் “மணிவிழா“ என்ற பெயரால், தங்களின் வயது 60 முடிகிற போது விழா கொண்டாடி மகிழ்கிறார்கள். ஆனால் எனக்கும், திமுக பொதுச்  செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனுக்கும் நட்புக்காகவே ஒரு மணி விழா கொண்டாட வேண்டும்”.

“1942ம் ஆண்டு திருவாரூர், விஜயபுரத்தில் நடைபெற்ற இஸ்லாமிய இளைஞர்கள் இணைந்து நடத்திய சிக்கந்தர் விழா ஒன்றில் கலந்து கொள்ள அண்ணா வந்த போது, அந்த விழாவுக்கு நானும் சென்றிருந்தேன்”.

karunanidhi_anbalagan
வெள்ளிக்கிழமை அன்பழகனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் கருணாநிதி
#TamilSchoolmychoice

“இறுதியாக அண்ணாவைப் பேசுவதற்காக அழைத்த நேரத்தில், அண்ணா எழுந்து, “நான் பேசுவதற்கு முன்பு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து  மாணவர் ஒருவரை நான் அழைத்து வந்திருக்கிறேன், அவர் உங்கள் முன்னால் பேசுவார்“ என்ற அறிமுகத்தோடு ஒரு இளைஞரை அங்கே பேச வைத்தார்”.

“அந்த  இளைஞர் தான் இன்று 93-வது பிறந்த நாள் காணும் அன்பழகனார்! முதன் முதலாக அங்கே தான் நான் பேராசிரியரைச் சந்தித்து அறிமுகம் செய்து  கொண்டேன்”.

“அப்போது எங்களிடையே ஏற்பட்ட நட்பு தான், எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள், இன்ப துன்பங்கள் ஆகியவற்றுக்கிடையே “மணிவிழா“ கண்டு அதற்கு  மேலும் இரண்டாண்டுகள் கடந்து, அவருக்கு நானும், எனக்கு அவரும், இருவரும் சேர்ந்து நம்முடைய கழகத்துக்கு துணையாகவும் இருந்து நடத்தி வருகிறோம்”.

“இந்த வயதிலும் நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, நிதானமான போக்கு, நேர்மையான சிந்தனை, தன் மனதில் பட்ட கருத்தை மறைக்காது எடுத்துரைக்கும்  திறந்த நெஞ்சம், ஆபத்து தமிழுக்கோ, தமிழ் இனத்துக்கோ என்றால் அனலாகக் கொதிக்கின்ற உள்ளம்.”

“அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அறிஞர் அண்ணா கண்டெடுத்த கொள்கை முத்துக்களில் ஒன்றே பேராசிரியர் அன்பழகன். நீ வாழ்க வாழ்க என்று மனமார வாழ்த்துகின்றேன்” என  திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.