கோலாலம்பூர், டிசம்பர் 21 – ஒட்டு மொத்த நாடும் பரபரப்புடனும் ஆர்வத்துடனும் எதிர்பார்த்த சுசுக்கி கிண்ணப் போட்டியின் இறுதியாட்டம் மலேசிய காற்பந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே தந்துள்ளது.
சனிக்கிழமை இரவு புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெற்ற இறுதிச் சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் மலேசியா வென்றபோதிலும், ஒட்டுமொத்த கோல்களின் அடிப்படையில் தாய்லாந்து இம்முறை கிண்ணத்தை தட்டிச் சென்றது.
கடந்த புதன்கிழமை பேங்காக்கில் நடைபெற்ற இறுதி போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் 2-0 என்ற புள்ளிக் கணக்கில் தாய்லாந்து வெற்றி பெற்றிருந்தது. இதனால் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் 2 கோல்கள் வித்தியாசத்தில் தாய்லாந்தை வெற்றிகொள்ள வேண்டிய கட்டாயம் மலேசியாவுக்கு ஏற்பட்டது.
அதாவது நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மலேசியா 3-0 கோல் அடித்து வென்றால்தான் கிண்ணம் மலேசியாவின் கைக்கு வரும் என்ற நிலைமை இருந்தது.
எனினும் உள்நாட்டு ரசிகர்களின் ஆதரவுடன் மலேசிய அணி சாதிக்கும் என்றே விளையாட்டு விமர்சகர்கள் கருதினர்.
இதையடுத்து சனிக்கிழமை புக்கிட் ஜாலில் அரங்கில் சுமார் 90 ஆயிரம் உள்நாட்டு ரசிகர்களின் ஏகோபித்த கரவொலிகளுக்கிடையில் மலேசிய வீரர்கள் களம் இறங்கினர்.
தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் ஈடுகொடுத்து விளையாடியதால் போட்டி விறுவிறுப்பாக அமைந்தது. ஆட்டத்தின் 6வது நிமிடத்தில் சஃபிக் ரஹிம் மலேசியாவுக்கான முதல் கோலை அடித்தார். இதையடுத்து இந்திரா புத்ரா முகையுடின் முதல் பாதி ஆட்டத்தின் கூடுதல் நிமிடத்தில் 2வது கோலை அடித்தார். ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் மலேசியாவுக்கான 3வது கோலை சஃபிக் ரஹிமே மீண்டும் அடித்தார்.
இதனால் மலேசிய அணி வலுவான நிலையில் இருந்தது. எதிர்பார்த்தபடி மலேசியாவே கிண்ணத்தை வெல்லும் என்ற நிலைமை இருந்தது. ஆனால் ஆட்டம் முடிவடைய இருந்த கடைசி தருணங்களில், சுமார் 6 நிமிட இடைவெளியில், தாய்லாந்து வீரர்கள் அடுத்தடுத்து 2 கோல்களை திணித்தனர். இதனால் மலேசிய அணி கூட்டு கோல் எண்ணிக்கையில் 3-2 என்ற கணக்கிலேயே வெற்றியைப் பதிவு செய்ய முடிந்தது.
இறுதிப்போட்டியின் இரு சுற்று ஆட்டங்களின் முடிவில் 4-3 என்ற ஒட்டுமொத்த கோல்களின் அடிப்படையில் தாய்லாந்து சுசுக்கி கிண்ணத்தை வென்றது. இதனால் மலேசிய ரசிகர்கள் மிகுந்த சோகத்துடன் புக்கிட் ஜாலில் அரங்கிலிருந்து வெளியேறினர்.
முன்னதாக கடந்த 1996, 2000, 2002ஆம் ஆண்டுகளிலும் தாய்லாந்து இக்கிண்ணத்தை வென்றுள்ளது.
படங்கள்: EPA