கோலாலம்பூர், டிச 18 – இதுவரை 7 முறை மேற்கூரை சரிவு ஏற்பட்டுவிட்ட போதிலும், செர்டாங் மருத்துவமனையைக் கட்டிய குத்தகை நிறுவனமான ரென்ஹில் அது குறித்து வாய் திறக்க மறுக்கிறது.
இது குறித்து அண்மையில் கருத்துரைத்த சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம், குத்தகை நிறுவனம் தான் அதற்கு முழுப் பொறுப்பு. இனி அரசாங்கம் இதில் தலையிடாது என்று கூறிவிட்டார்.
அந்நிறுவன அதிகாரிகளை பத்திரிக்கைகள் தொடர்பு கொண்ட போது, தாங்கள் பொதுப்பணித்துறையின் விசாரணையில் இருப்பதால் தற்போது கருத்துரைக்க இயலாது என்று கூறிவிட்டனர்.
690 மில்லியன் ரிங்கிட் செலவில் கட்டப்பட்ட அம்மருத்துவமனையை பராமரிக்கும் பொறுப்பு கடந்த 2007 ஆம் ஆண்டு வரை ரென்ஹில் நிறுவனத்திடம் இருந்தது என்றும், அதன் பின்னர் வேறு நிறுவனங்கள் அப்பொறுப்பை ஏற்றதாகவும் கூறப்படுகிறது.
எனவே ரெல்ஹில் நிறுவனத்தோடு சேர்த்து மற்ற நிறுவனங்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.