புதுடெல்லி, டிசம்பர் 18–அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய தூதரகத்தில் துணைத் தூதராகப் பணியாற்றுபவர் தேவயானி கோப்ரகடே. இவர் தனது வேலைக்கார பெண்ணுக்கு அமெரிக்க விசா பெற்றதில் தவறான தகவல் அளித்து மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
இதற்காக கடந்த 12–ந்தேதி தனது குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு திரும்பிய போது தேவயானியை அமெரிக்க காவல்துறையினர் பொது இடத்தில் வைத்து கைது செய்தனர். அவருக்கு கை விலங்கு மாட்டி அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அத்துடன் அவரை போதை குற்றவாளிகள், விபசார பெண்களுடன் சிறைக் காவலில் வைத்தது. ஆடைகளை அவிழ்த்தும் சோதனையிட்டனர். இதனால் அமெரிக்க அரசு மீது மத்திய அரசு கடும் ஆத்திரம் அடைந்துள்ளது.
அமெரிக்க காவல்துறையினர் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரை மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் சுஜாதாசிங் நேரில் வரவழைத்து இந்தியாவின் கண்டனத்தை தெரிவித்தார். இந்திய தூதரிடம் பொது இடத்தில் காவல்துறையினர் நடந்து கொண்ட விதம் மற்றும் ஆடைகளை அவிழ்த்து சோதனையிட்டதற்காக அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்தியா நிபந்தனை விதித்துள்ளது.
வெறும் கண்டனத்துடன் நிற்காமல் இந்தியாவில் பணியாற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்துள்ளது. தூதர் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் ரத்து செய்யப்பட்டன.
தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் தங்களது அடையாள அட்டைகளை உடனடியாக திருப்பி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தர விட்டுள்ளது. இதன் மூலம் அடையாள அட்டைகளின் தரத்தை குறைத்து சலுகைகளை நிறுத்த முடிவு செய்துள்ளது.
அமெரிக்க தூதரகங்களில் பணியாற்றும் இந்திய ஊழியர்களின் சம்பள கணக்கு விவரங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க அதிகாரிகளின் விமான நிலைய அனுமதி சீட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் உள்ள அமெரிக்க கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களின் விசா விவரங்கள், இந்தியர்களின் சம்பளம் மற்றும் வங்கி கணக்குகளையும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே அமெரிக்க சட்டப்படிதான் பெண் தூதர் நடத்தப்பட்டார் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேரி ஹார்ப் வாஷிங்டனில் நிருபர்களிடம் தெரிவித்தார். அமெரிக்க காவல்துறையின் நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையில் கூறினார்.
இந்த நிலையில் அமெரிக்க நாடளுமன்ற உறுப்பினர் குழு அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ளனர். அவர்கள் மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து பேச முடிவு செய்து இருந்தனர். பெண் தூதர் மீதான நடவடிக்கையைத் தொடர்ந்து அமெரிக்க நாடளுமன்ற உறுப்பினர் சந்திப்பு நிகழ்ச்சியை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, உள்துறை மந்திரி ஷிண்டே, குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடி, பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர்மேனன் ஆகியோர் ரத்து செய்து விட்டனர்.
மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால் அமெரிக்கா பணிந்தது இந்திய பெண் தூதர் தேவயானி கைது செய்யப்பட்டது குறித்து ஆய்வு செய்வதாக அமெரிக்க வெளியுறவு அதிகாரி ஒருவர் கூறினார்.
இதற்கிடையே காங்கிரஸ் அரசு மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை அதிகரிக்கவே அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை அமெரிக்க விமான நிலையத்தில் காலணி கழற்றச் சொல்லி சோதனையிட்டு அவமானப்படுத்தியது, இந்திய தூதர் மீரா சங்கரை மற்றொரு அமெரிக்க விமான நிலையத்தில் தோளில் தட்டி உட்கார வைத்தது போன்ற சம்பவங்கள் நடந்த போது காட்டாத தீவிரத்தை இப்போது காட்டுவது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது என்றும் தெரிவித்தனர்.