Home வாழ் நலம் நிறைவான தூக்கம் அவசியம்

நிறைவான தூக்கம் அவசியம்

563
0
SHARE
Ad

womansleepingforweb

கோலாலம்பூர், டிசம்பர் 19- உலகில் சரிபாதிப் பேர் நிம்மதியான உறக்கமின்றித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இருட்டு- வெளிச்சம், இன்பம்- துன்பம், கஷ்டம்- நஷ்டம், நன்மை- தீமை, சந்தர்ப்பம்- சூழ்நிலை இவற்றோடு சம்பந்தப்பட்டது தூக்கம். நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் தூக்கத்தை வரவழைக்க முடியாது.

அதேமாதிரி நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் வருகிற தூக்கத்தை நிறுத்தவும் முடியாது. தூக்கமின்மை, அதாவது போதிய நேரம் தூங்காததை மருத்துவ மொழியில் ‘இன்சோம்னியா’ என்று சொல்கிறார்கள்.

#TamilSchoolmychoice

தூங்கப்போவதற்கு முன்பு தீவிரமான யோசனை, மூளையைக் கசக்கி சிந்திப்பது, உடலை அதிகமாக வருத்திக்கொள்வது, உடலுக்கு அதிகமாக வேலை கொடுப்பது, தூங்கும் இடம் ஒரு நல்ல சூழ்நிலையில் அமைந்திராமல் இருப்பது, தூங்கும் நேரம் ஒத்துப் போகாமல் இருப்பது, நாள்பட்ட உடல் நோய்கள், தாங்க முடியாத வலி, மன அழுத்தம், மன உளைச்சல் இவை அனைத்துமே தூக்கத்தைப் பாதிக்கும். ஆகவே, இதுபோன்று செய்வதை தவிர்க்க வேண்டும்.

தூக்கத்தை வரவழைக்க பலரும் பலவித முறைகளைக் கையாளுகிறார்கள். சிலர் யோகா செய்கிறார்கள். சிலர் தியானம் செய்கிறார்கள், சிலர் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுகிறார்கள். சிலர் மது அருந்துகிறார்கள். இப்படி பலவிதமான முறைகளைக் கையாண்டு தூக்கத்தை வரவழைக்கிறார்கள். தூக்கமின்மைக்கும் மதுவுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. மது அருந்தினால் நல்ல தூக்கம் வரும் என்று நிறையப் பேர் நினைக்கிறார்கள்.

தூக்கம் வர வேண்டும் என்பதற்காகவே மதுபானம் அருந்த ஆரம்பித்தவர்கள் நிறைய பேர். ஆரம்பத்தில் மதுபானம் நல்ல தூக்கத்தைத் தருவதைப் போலத் தோன்றினாலும், நாளடைவில் அது தூக்கத்தைக் குலைக்கும். முன்னிரவில் தூக்கத்தை கொடுத்து பின்னிரவில் தூக்கத்தைக் கெடுத்துவிடும் தன்மையுடையது மது பானம். ஆகவே, தூங்க வேண்டும் என்பதற்காக மதுபானம் அருந்தும் பழக்கத்தை தொடங்காதீர்கள்.