டிசம்பர் 24- எம்.ஜி.ஆரின் 26வது நினைவு நாள் அனுசரிக்கப்படும் நிலையில் அவரின் நினைவுகளை நாம் கொஞ்சம் பகிர்ந்து கொள்வோம்.
1917 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் ஆண்டு இப்பூவுலகில் பிறந்த எம்.ஜி.ஆர் தனது தாய் சத்யபாமா மீது அளவற்ற அன்பு கொண்டவர். தனது தந்தையின் மரணத்திற்கு பின் மதுரையில் உள்ள நாடக நிறுவனம் ஒன்றில் நாடக நடிகராக கலைத்துறையுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.
நாடகங்களில் நடித்து வந்த அவர், 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். பல தரப்பட்ட பாத்திரங்களில் நடித்த அவர் சினிமாவில் தனக்கென தனி பாணியை வகுத்துக்கொண்டார்.
நாடக குழுவிலிருந்து திரைத்துறைக்கு வந்த பின் அவருக்கு தொடர்ந்து வெற்றி கிடைத்துக்கொண்டேயிருந்தது. இந்நிலையில் அண்ணாவின் எழுத்தால் கெளரவிக்கப்பட்ட மக்கள் திலகம் அவர்கள் திராவிட முன்னேற்ற கட்சியில் இணைந்தார்.
அண்ணாவின் மறைவிற்கு பின் திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின் 1972 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை துவக்கினார். கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்தில் 1973 ஆம் ஆண்டு நடந்த திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் மாயத்தேவரை நிற்க வைத்து வெற்றி பெற வைத்து அரசியலில் தனது சாதனை ஓட்டத்தை துவக்கினார்.
தமிழக அரசியல் வரலாற்றில் காமராஜருக்கு பிறகு தொடர்ந்து 2வது முறையாக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு.
தன்னுடைய ஆட்சிக்காலத்தில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றுவதற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். குறிப்பாக கல்வித் துறையில் மிகப்பெரிய சீர்திருந்தங்களை கொண்டு வந்தார். 1982 ஆம் ஆண்டில் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி அதை வெற்றிகரமாக நடத்திக்காட்டினார். மகளிருக்கு சிறப்பு பேருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
தமிழக அரசியல் வரலாற்றில் மது விற்பனையை தடை செய்த மகத்தான தலைவர் புரட்சித்தலைவர் ஆவார். பழமையான கோவில்களுக்கு முக்கியத்துவம் தந்து அவற்றை புனரமைக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்தார். சுற்றுலாத் துறையில் தமிழகம் வளர்ச்சி அடைய நடவடிக்கை எடுத்தார்.
குறிப்பாக ஈழத்தமிழர் நலனில் உண்மையான அக்கறை கொண்டிருந்தார். பல்வேறு வகைளில் அவர்களுக்கு நிதியுதவியும், பொருளுதவியும் தந்த “வள்ளல்” அவர்.
1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ந்தேதி இப்பூவுலகை விட்டு மறையும் வரை ஏழைகளின் நலனுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்த இந்த பொன்மனச் செம்மலை மனிதாபிமானத்தின் மகாத்மா என்று குறிப்பிடுவது சாலச்சிறந்தது.