கோலாலம்பூர், ஜன 2 – விலையேற்றத்திற்கு எதிராக டத்தாரான் மெர்டேக்காவில் கடந்த 31 ஆம் தேதி இரவு நடைபெற்ற பேரணியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் காயமடைந்ததாகக் கூறி பிடிஆர்எம் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்த புகைப்படத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து காவல்துறை மன்னிப்பு கேட்டுள்ளது.
தலையில் காயமடைந்து ரத்தம் வடிவது போல் உள்ள காவலர் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்ட காவல்துறை, அவர் பேரணியில் காயமடைந்தார் என்று குறிப்பிட்டிருந்தது.
ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பலர், நேற்று பணியில் இருந்த 3 காவலர்கள் தங்கள் ஆயுதங்களால் காயமடைந்தனர் என்றும், அவர்கள் பேரணியில் காயமடையவில்லை என்றும் கருத்துத் தெரிவித்தனர்.
இதனையடுத்து, தங்கள் செயலுக்கு காவல்துறை மன்னிப்பு கோரியது.
இது குறித்து காவல்துறை சார்பாக நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், “பேரணியில் தான் அந்த காவலர் காயமடைந்தார் என்று எண்ணி கவனக்குறைவாக படத்தை வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். காவல்துறையினரும் மனிதர்கள் தான். அவர்களும் கவனக்குறைவாக சில தவறுகள் செய்வது இயல்பு. இந்த தவறுகளை விட்டு ஓடமுடியாது. எங்களது பலவீனங்களை திருத்திக்கொள்வோம். நிலைமையை மேலும் மோசமானதாக ஆக்குவது எங்களது நோக்கமல்ல” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.