கோலாலம்பூர், ஜன 2 – கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி நடைபெற்ற விலையேற்றத்திற்கு எதிரான பேரணியில், புக்கிட் பிந்தாங்கில் இருந்து டத்தாரான் மெர்டேக்கா வரை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலம் சென்ற போது, யாரோ வீசி எரிந்த நுரை தெளிப்பு தகரம் (foam spray tin) பட்டு தான் காயமடைந்ததாக 44 வயதான காவலர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாகவும், சட்டத்திற்குப் புறம்பான வகையில் இளைஞர்கள் இந்த காரியத்தை செய்ததாகவும் காவலர் பைசுல் அலி கூறியுள்ளார்.
“அதிகாரிகளை மதிக்கத்தெரியவில்லை என்றால் அவர்கள் எந்த பல்கலைக்கழகத்திலும் படித்து பயன் இல்லை” என்றும் பெரித்தா ஹரியான் பத்திரிக்கைக்கு காயமடைந்த காவலர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, டத்தாரான் மெர்டேக்கா அருகே ஜாலான் ராஜாவில் சிறப்பு படையைச் சேர்ந்த மற்றொரு காவல்துறை அதிகாரியை ஆர்ப்பாட்டக்காரர்கள் மார்பில் மிதித்து முரட்டுத்தனமாக நடந்துள்ளனர் என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் முகமட் சாலே குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் காயமடைந்ததாகக் கூறி பிடிஆர்எம் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்த புகைப்படத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து காவல்துறை மன்னிப்பு கேட்டுள்ளது.