கோலாலம்பூர், ஜன 2 – டத்தாரான் மெர்டேக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடந்த பேரணி ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிரச்சனை ஏற்படுத்தும் நோக்கத்தில் அந்த கூட்டம் பேரணி நடத்தியதாகவும் மகாதீர் குறிப்பிட்டார்.
“ஒரு ஜனநாயக நாடு என்ற முறையில் சிறுபான்மை மக்களுக்கும் உரிமை உண்டு. ஆனால் பெரும்பான்மையான மக்களின் புத்தாண்டு கொண்டாட்ட மகிழ்ச்சியை கெடுக்கும் நோக்கில் அந்த சிறும்பான்மையினர் செயல்பட்டால், பெரும்பான்மையினர் புத்தாண்டைக் கொண்டாட முடியாது. பிறகு அங்கு ஜனநாயகம் எங்கே இருக்கிறது?” என்று மகாதீர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், “நீங்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்றால், வேறு எங்காவது ஒரு இடத்தில் நடத்துங்கள், ஆனால் பிற மக்களை தொந்தரவு செய்யாதீர்கள்” என்றும் மகாதீர் குறிப்பிட்டார்.
கடந்த 31 ஆம் தேதி இரவு, விலைவாசி உயர்வுக்கு எதிராக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் ஒன்று கூடி பேரணி நடத்தினர். இதனால் புத்தாண்டு கொண்டாட்டம் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.