ஜனவரி 4 – நாட்டின் ஒரே அரசு சார்பு மின்சார வாரியமான தெனாகா நேஷனல் பெர்ஹாட் நிறுனத்தில் ம.இ.கா சார்பான இயக்குநராக ம.இ.கா.வின் முன்னாள் பொருளாளரான செனட்டர் டத்தோ ஜஸ்பால் சிங், தேசியத் தலைவர் பழனிவேலுவால் நியமிக்கப்பட்டுள்ளார் என சில வாரங்களுக்கு முன்னால் தகவல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன என்பது அனைவரும் அறிந்ததே.
அதனை மறுத்து ம.இ.கா சார்பாக எந்தவித அறிக்கையும் இதுவரை வெளியாகததால், ஜஸ்பால் சிங் தெனாகா நேஷனல் இயக்குநராக நியமிக்கப்பட்டுவிட்டார் என்றே பலரும் கருதினர்.
அப்போது, ஜஸ்பால் சிங்கிற்கே எல்லாப் பதவிகளும் ஏன் கொடுக்கப்பட வேண்டும் என்ற சர்ச்சைகளும் ம.இ.கா வட்டாரங்களில் எழுந்தன.
ஆனால், தெனாகா நேஷனல் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையத் தளத்தில் இடம்பெற்றுள்ள இயக்குநர்களின் பட்டியலைக் கண்ணோட்டமிட்டபோது அதில் டான்ஸ்ரீ ஹரி நாராயணன் பெயர் மட்டுமே ஒரே இந்தியராக இன்னும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்தான் தற்போது ம.இ.காவின் சார்பிலான பிரதிநிதி என்பதும், டத்தோஸ்ரீ சாமிவேலுவின் தலைமைத்துவத்தின் போது இவர் தெனாகா இயக்குநராக நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், ஜஸ்பால் சிங்கின் பெயரை பழனிவேலு திரும்ப பெற்றுக் கொண்டார் என்றும் ஜஸ்பால் சிங்கிற்குப் பதிலாக மற்றொருவர் தெனாகா நேஷனல் இயக்குநராக நியமிக்கப்படலாம் என்றும் ம.இ.கா வட்டாரங்களில் தற்போது பேசப்படுகின்றது.
நடந்து முடிந்த கட்சித் தேர்தலின் முடிவுகளின்படி உதவித் தலைவர் தேர்தலில் சொற்ப வாக்குகளில் தோல்வியடைந்த ஜஸ்பால், தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே கட்சித் தேர்தல் நடத்தப்பட்ட விதம் குறித்து அனுப்பியதாகக் கூறப்படும் செல்பேசி குறுந்தகவலால், பழனிவேலுவுக்கும், ஜஸ்பாலுக்கும் இடையில் மன வருத்தம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து இருவருக்கும் ஏற்பட்ட கருத்து மோதல்களைத் தொடர்ந்து, அதிருப்தி அடைந்த பழனிவேல், தெனாகா இயக்குநராக அவரை நியமிப்பதில்லை என முடிவு செய்திருப்பதாகவும், அவருக்குப் பதிலாக மாற்று இயக்குநர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ம.இ.கா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அநேகமாக வர்த்தகர் ஒருவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்றும் ஆரூடங்கள் கூறப்படுகின்றன.