கிள்ளான், ஜன 5 – கிள்ளானில் உள்ள ஒரு தேவாலயத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சிலாங்கூரில் உள்ள இஸ்லாமிய குழுக்கள் அச்சுறுத்தியுள்ள வேளையில், அந்த தேவாலயத்திற்கு பாதுகாவல் வழங்கவும் முன்னின்று தற்காக்கவும், முற்போக்கு சிந்தனை கொண்ட முஸ்லீம் அன்பர்கள் முன்வந்துள்ளனர்.
இன்று காலை, அவர்கள் கிள்ளானில் உள்ள ‘லேடி லூர்ட்ஸ்” என்ற அந்த தேவாலயத்தின் முன்னால் நின்று கொண்டு பாதுகாப்பு வழங்கினர். அவர்களுள் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவின் மகள் மரீனா மகாதீரும் (படம்) ஒருவராவார்.
சுமார் 40 பேரைக் கொண்ட அந்த குழு ‘முற்போக்கு இஸ்லாமியர்கள்’ என தங்களைக் கூறிக் கொண்டு கைகளில் பூக்களுடன் அந்த தேவாலயத்தின் முன்னால் நின்று கொண்டிருந்தனர். தேவாலயத்தின் உள்ளே இன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் அதற்குரிய கிறிஸ்துவ மத பிரார்த்தனைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
அங்கிருந்த பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மரீனா மகாதீர் ‘நாங்களும் இஸ்லாமியர்கள்தான். இஸ்லாம் அமைதியை விரும்பும் மதம் என்று வெறும் வாய்மொழியாக மட்டும் கூறிக் கொண்டால் போதாது. அதனை செயலிலும் காட்டவே இங்கே நாங்கள் கிறிஸ்துவ சகோதரர்களைப் பாதுகாக்க கூடியிருக்கின்றோம்” என்று மரினா மகாதீர் கூறினார்.