Home வாழ் நலம் ‘பால் பற்களை’ பாதுகாக்க வேண்டும்!

‘பால் பற்களை’ பாதுகாக்க வேண்டும்!

490
0
SHARE
Ad

745234a8-294e-4371-aafa-1b26f218e105_S_secvpf

கோலாலம்பூர், ஜன 7 – குழந்தை பிறந்தவுடன் ஆறு மாதங்களுக்கு பிறகு ‘பால் பற்கள்’ எனப்படும் தற்காலிக பற்கள் வளர ஆரம்பிக்கும். இரண்டரையிலிருந்து மூன்று வயதுக்குள் கிட்டத்தட்ட எல்லா பற்களுமே வளர்ந்திருக்கும். அந்த வயதில்தான் அம்மாக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பொதுவாக இந்தப் பருவத்தில் புட்டிப் பால் கொடுக்க ஆரம்பிக்கும் அம்மாக்கள், பால் புட்டிலை குழந்தையின் வாயில் வைத்தபடியே தூங்கச் செய்து விடுவார்கள். இதனால் குழந்தைகளின் பற்களில் அந்தப் பால் படிந்துவிடும்.

#TamilSchoolmychoice

எப்போதும் நம் வாயில் நிரந்தரமாக இருக்கும் ‘ஸ்டிரெப்டோ காகஸ்’ எனப்படும் பாக்டீரியாக்கள், பற்களில் படிந்திருக்கும் அந்தப் பாலோடு வினை புரிந்து பற்சொத்தையை ஏற்படுத்தும்.  குழந்தைகளுக்கு இப்படிப் பட்ட தொந்தரவு ஏற்படாமல் இருக்க பால் குடித்த உடனே கொஞ்சம் தண்ணீர் கொடுத்து குடிக்க வைக்க வேண்டும்.

பால் பற்கள் விழுந்து குழந்தைக்கு நிரந்தரமான பற்கள் வளர ஆரம்பிக்கும் பருவத்திலும் தாய்மார்கள் கவனமாக இருக்க வேண்டும். சில பால் பற்கள் விழாமல் இருக்கும்போதே அதே இடத்தில் நிரந்தரமான பல் சற்று சாய்வாக முளைக்க ஆரம்பிக்கும்.

அப்படிப்பட்ட தருணத்தில் இடையூறாக இருக்கும் பால் பற்களை மருத்துவரிடம் சென்று நீக்கி விட வேண்டும். நீக்காவிட்டால், பற்களில் அழுக்குச் சேர்வது, நாக்குக்கு இடையூறாக பற்கள் வளர்ந்து அதனால் பேச்சுக்கு இடையூறு ஏற்படுவது போன்றவை நிகழும்.

சின்ன வயதிலேயே பற்கள் நீண்டு வளர்வதால் சிலருக்கு முக அமைப்பே மாறி அவலட்சணமாக தோற்றமளிக்கும். பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் விரல் சூப்புவதே இதற்குக் காரணம்.

பால் பற்கள் விழுந்து நிரந்தரமான பற்கள் வளரும் பருவத்தில் இந்தப் பழக்கம் தொடரும்போது பற்களின் நேரான வளர்ச்சிக்கு விரல்கள் இடையூறாக இருப்பதால் பற்கள் தம் இயல்பை விட்டு விரல் சூப்பும் நிலைக்கேற்ப நீண்டு வளர ஆரம்பிக்கும்.

எனவே, மூன்றில் இருந்து நான்கு வயது வரை குழந்தைகள் விரல் சூப்பினால் பரவாயில்லை. அதற்கு மேல் அந்தப் பழக்கத்தை அனுமதிக்கக் கூடாது.