திருவனந்தபுரம் : பழம்பெரும் மலையாள சினிமா இசை அமைப்பாளர் கே.பி. உதயபானு மரணமடைந்தார். அவருக்கு வயது 77. அவரது உடல் அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது.
மலையாள சினிமாவில் 1956ல் ‘நாயர் பிடித்த புலிவால்‘ என்ற படத்தின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானவர் கே.பி. உதயபானு. சமஸ்தியா என்ற படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனார். இதுவரை 100க்கும் மேற்பட்ட மலையாள பாடல்கள் பாடியுள்ளார். பெரும்பாலும் இவர் சோக பாடல்களையே அதிகம் பாடியுள்ளார். கடைசியாக இவர் 2011ல் வெளியான பிருத்விராஜ் நடித்த ‘தாந்தோன்னி‘ படத்தில் பாடியுள்ளார்.கே.பி. உதயபானு கடந்த ஒரு வருடமாக பார்கின்சன் என்ற நோயால் அவதிப்பட்டு வந்தார்.
இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் திருவனந்தபுரத்தில் அவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் உதயபானு மரணமடைந்தார். அவரது உடலுக்கு முதல்வர் உம்மன்சாண்டி மற்றும் மலையாள சினிமா பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து திருவனந்தபுரம் தைக்காட்டில் உள்ள மின் மயானத்தில் நேற்று அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இவரது மனைவி விஜயலட்சுமி கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்தார். இவருக்கு ராஜீவ் என்ற மகன் உள்ளார்.மறைந்த கே.பி. உதயபானு சிறந்த பாடகருக்கான கேரள அரசு விருதும், சங்கீத நாடக அகாடமி விருதும் பெற்றுள்ளார். 2009ல் இவர் பத்மஸ்ரீ விருது பெற்றார்.