புதுடில்லி: ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, 7 பத்ம விபூஷண், 19 பத்ம பூஷன் மற்றும் 113 பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டது.
விருது பெறுபவர்களில் 12 பேர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள். பத்ம விருது பெறுபவர்கள் பின்னர் அறிவிக்கப்படும் தேதியில் இந்திய அதிபரிடமிருந்து நேரடியாக விருதுகளைப் பெறுவர்.
கலையுலகத்தைச் சார்ந்த நடிகர் அஜித் குமார், நடிகை ஷோபனா ஆகியோருக்கு பத்ம பூஷன் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு திரையுலகினர் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
ஷோபனா தீவிரமாக நடனத்துறையில் ஈடுபட்டு வருவதோடு தளபதி படத்தில் ரஜினியுடன் நடித்திருந்தார். மேலும் பல படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
பிரபல தொழிலதிபர் நல்லி குப்புசாமியும் பத்ம பூஷன் விருது பெறுகிறார். இவர் சென்னையில் உள்ள பிரபல நல்லி ஜவுளிக் கடையின் உரிமையாளர் ஆவார்.
பத்மஸ்ரீ விருது பெறுபவர்களில் தமிழ் நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வின், பிரபல சமையல் கலை நிபுணர் தாமோதரன் தினமலர் பத்திரிகை நிறுவனத்தின் லக்ஷ்மிபதி ராமசுப்பையர், ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
பத்ம்பூஷண் விருது பெறும் அஜித் அதிபர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கும் தனது பெற்றோருக்கும் தனது மனைவிக்கும் தனது ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.