சிலாங்கூர், ஜன 9 – கிறிஸ்தவ நூல்கள் குறித்த புத்ரஜெயாவின் 10 புள்ளிகள் கொண்ட தீர்வின் படி இருப்பின், கடந்த ஜனவரி 1 ஆம் தேதி பறிமுதல் செய்யப்பட்ட பைபிள்களை திரும்ப ஒப்படைக்குமாறு சிலாங்கூர் இஸ்லாமியக் கழகத்திற்கு (ஜாயிஸ்) ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மந்திரி பெசார் அப்துல் காலிட் இப்ராகிம் நேற்று மாநில செயலவை உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து இம்முடிவை அறிவித்தார்.
மேலும், சிலாங்கூர் சுல்தானின் ஆணை மற்றும் சட்டங்கள் ஆகியவற்றை நிலைநாட்டி, சிலாங்கூரில் அனைவரும் நல்லிணக்கத்தோடு வாழ மாநில அரசாங்கம் வழிவகை செய்யும் என்று தெரிவித்தார்.
“மத்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி மாநில அரசாங்கம் மத சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கிறது மற்றும் குடிமக்களுக்கிடையே மரியாதை நிலவ முயற்சிகளை மேற்கொள்கிறது. அதேநேரத்தில் இஸ்லாமை அதிகாரப்பூர்வ மதமாகவும், சிலாங்கூர் சுல்தானை மாநில இஸ்லாம் தலைவராகவும் போற்றுகிறது” என்று காலிட் குறிப்பிட்டார்.
அல்லாஹ் விவகாரம் காரணமாக, கடந்த வாரம் மலேசிய பைபிள் கழக அலுவலகம் (BSM), இஸ்லாமிய விவகார இலாகாவால் (ஜாயிஸ்) சோதனையிடப்பட்டு மலாய் மொழியில் இருந்த 300 பைபிள் பிரதிகளும், ஐபானில் இருந்த 10 பிரதிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.