ஜனவரி 10 – அந்த காலத்தில் ஒரே நேரத்தில் எம்ஜிஆர், சிவாஜி படங்கள் வெளியாகி பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி, அவர்களின் இரசிகர்களுக்கிடையில் போட்டி மனப்பான்மையை உருவாக்கி, எது சிறந்த படம், எது வசூலை அதிகமாக வாரிக் குவித்தது என்பது போன்ற வாதங்களை ஏற்படுத்தும்.
அதன் பின்னர் ரஜினி-கமல் என இருந்த போட்டி தற்போது அஜீத் – விஜய் என உருமாற்றம் கண்டுள்ளது.
நீண்ட காலத்திற்குப் பின்னர் தமிழ் திரையுலகின் உச்சத்தில் இருக்கும் அந்த இரண்டு நட்சத்திர நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் பொங்கல் வெளியீடாக இன்று உலகம் எங்கும் திரையிடப்படுகின்றன.
அதனைத் தொடர்ந்து எந்தப் படம் நன்றாக இருக்கின்றது – எந்த படம் வசூலில் வெற்றி பெறும் என்பது போன்ற ஆரூடங்களும் தமிழ்நாட்டிலும் மற்ற நாடுகளின் தமிழ்ப்பட இரசிகர்களிடத்திலும் எழுந்திருக்கின்றன.
மலேசியாவில் ஜில்லா இதுவரை திரையிடப்படவில்லை
மலேசியாவில் முதல் நாளாக இன்றே இரண்டு படங்களும் திரையிடப்படுகின்றன என்ற விளம்பரங்கள் பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டிருந்தாலும், முதல் காட்சியாக மதியம் 12.00 மணியளவில் அஜீத் நடித்த ‘வீரம்’ படம் மட்டுமே முதல் காட்சியாக திரையிடப்பட்டிருக்கின்றது.
திரையரங்குகளில் இரசிகர்கள் குழுமியிருந்தாலும், இதுவரை ஜில்லா திரையிடப்படவில்லை என்றும் வீரம் படத்திற்கு மட்டுமே நுழைவுச் சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாகவும் சில இரசிகர்கள் ‘செல்லியலுக்கு தொலைபேசி வாயிலாகத் தெரிவித்தனர்.
பல விஜய் இரசிகர்கள், முதல் காட்சியிலேயே ஜில்லா படத்தைப் பார்க்கும் ஆவலில் வந்து விட்டு இதுவரை ஜில்லா திரையிடப்படும் சாத்தியம் இல்லை என்ற காரணத்தால் மாற்றாக அதே நேரத்தில் வீரம் படத்திற்கு நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஜில்லா இதுவரை வெளியிடப்படாததன் காரணம் தெரியவில்லை. தமிழ் நாட்டில் படத்தை வெளியிடக்கூடாது என்று கோரி தனிநபர் ஒருவர் வழக்கு தொடுத்திருக்கின்றார். அது காரணமா? அல்லது வேறு ஏதாவது தொழில் நுட்ப காரணமா என்பது இதுவரை தெரியவில்லை.
ஜில்லா படத்திற்கான பிரதி திரையரங்குக்கு வந்துவிட்டது என்றாலும் அதனைத் திரையிடுவதற்கான ‘அனுமதி குறியீட்டு எண்’ (Pass word) இன்னும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்றும் அது கிடைத்தவுடன்தான் திரையிடும் நேரம் தெரிவிக்கப்படும் என்றும் கோலாலம்பூரில் உள்ள ஒரு திரையரங்கில் தெரிவிக்கப்பட்டதாக அங்கு படம் பார்க்க சென்ற இரசிகர் ஒருவர் செல்லியலிடம் தெரிவித்தார்.