ஜனவரி15 – பொங்கல் வெளியீடாக உலகமெங்கும் திரை கண்ட இரண்டு பிரம்மாண்டமான படங்களான வீரம் – ஜில்லா இரண்டும் தமிழ் நாட்டிலும், மற்ற உலக நாடுகளிலும் மிகப் பெரிய வசூல் சாதனையைப் படைத்து வருகின்றன.
ஜனவரி 9ஆம் தேதி வியாழக்கிழமையன்று அமெரிக்காவில் இந்த இரண்டு படங்களும் திரையிடப்பட்டன. நான்கே நாட்களில் வீரம் 202,696 (1.24 கோடி ரூபாய்) அமெரிக்க டாலரை வசூலிக்க, ஜில்லா 194,172 அமெரிக்க டாலர் (1.19 கோடி ரூபாய்) வசூலித்ததாக தமிழகத்தின் இணைய செய்தித் தளங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
பல்வேறு மொழிப் படங்கள் திரையிடப்படும் மலேசியாவில் முதல் 10 படங்களில் ஜில்லா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 69 திரைகளில் ஜில்லா திரையிடப்பட, வீரம் 62 திரைகளில் வெளியீடு கண்டது.
திரையிடப்பட்ட நான்கு நாட்களில் ஜில்லா, 414,050 மலேசிய ரிங்கிட் (சுமார் 78 இலட்சம் ரூபாய்) வசூலித்துள்ளது. வீரம் படமோ 376,859 மலேசிய ரிங்கிட் (சுமார் 71 இலட்சம் ரூபாய்) வசூலித்துள்ளது.
ஆஸ்திரேலியாவிலும் ஒரே நேரத்தில் திரையீடு கண்ட இந்த படங்கள் அங்கேயும் வசூலில் சாதனை படைத்துள்ளன. 61,811 ஆஸ்திரேலிய டாலரை (சுமார் 34.3 இலட்சம் ரூபாய்) முதல் நான்கு நாட்களில் வீரம் வசூலித்து, மற்ற படங்களுடன் ஒப்பிடுகையில் 15வது இடத்தைப் பிடித்துள்ளது.
ஜில்லா படமோ 31,679 ஆஸ்திரேலியா டாலரை (17.5 இலட்சம் ரூபாய்) வசூலித்துள்ளது.
இந்தியா முழுமையிலும் ஜில்லா திரையிடப்பட்ட நான்கு நாட்களில் 340 மில்லியன் அல்லது 350 மில்லியன் ரூபாய் வசீலித்துள்ளதாக தமிழ்ப்பட வணிக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கேரளா மாநிலத்திலோ இதுவரை எந்தப் படத்திற்கும் இல்லாத அளவுக்கான வசூலையும் எதிர்பார்ப்பையும் ஜில்லா ஏற்படுத்தியுள்ளது. மலையாளப் படவுலகின் முன்னணிக் கதாநாயகன் மோகன்லால் முக்கியத்துவம் நிறைந்த கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளதுதான் இதற்கான காரணம் என்று கூறப்படுகின்றது.
ஏற்கனவே, கேரளாவில் விஜய் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது. இதோடு மோகன்லாலும் சேர்ந்து கொள்ள ஜில்லா கேரளாவில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தியாவில் மட்டும் திரையிடப்பட்ட முதல் நான்கு நாட்களில் 31 முதல் 32 கோடி ரூபாய் வசூலைக் கண்டுள்ளது வீரம் படம் என திரைப்பட வணிக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இரண்டு படங்களும் திரையிடப்பட்டுள்ள எல்லா திரையரங்குகளிலும் அடுத்த பத்து நாட்களுக்கு டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்து விட்டன. இதனால், இந்தப் படங்கள் தொடர்ந்து வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.